8
யார் யார் என்று தெரிந்தும்
தெரியாதது போல் இருந்தோமே அப்படி…
உறவினர் என்று தெரிந்தும்
உறவில்லாமலே
இருந்தோமே அப்படி…
உரிமைகள் உண்டு என்று அறிந்தும் உதறிக்கொண்டு நடந்தோமே அப்படி…
எப்போதைக்கெப்போதோ பேசிக்கொண்டாலும்
பேசிக்கொள்வது இல்லை போல இருக்கிறது
என்று மற்றவர் நினைக்க
பேசாமலே கடந்தோமே அப்படி…
பார்த்தாலும் மவுனமாக
மனக்காயப்படாமல் இருந்தோமே அப்படி…
மவுனவிரதம் பூட்டியும்
பூட்டிக் கொள்ளாமலும்
மலர்ச்சிகளைக் காட்டியும்
காட்டிக் கொள்ளாமலும்
மறு மறு புறங்களில் நின்றோமே அப்படி…
நூற்றுக்கணக்கானவர்கள் கூடிய கூடுகைகளிலும்
ஒரு கைகுலுக்கல் கூட இல்லாமல்
கூடிப் பிரிந்தோமே அப்படி…
ஒரு நாளில்…
ஒரு நிமிடத் துளியில்…
அந்த அணுப் பொழுதில்…
என் மனதுக்குள்
என் மனம் வெடித்துச் சிதறும்
அணுகுண்டு மத்தாப்புக் கொளுத்திப் போடப் போகிறாய்
என்ற மனக்கணக்கு எதுவும்
போடாமலே நடந்தோமே அப்படி…
கண்கள் தொடாமலும்
கைகள் படாமலும்
காயப்படாமல் கடந்தோமே அப்படி…
வித்தாகவும் இல்லாமல்… காதல்
பித்தாகவும் இல்லாமல்
சத்தமில்லாமல் கடந்தோமே அப்படி…
முத்தமிட்டுக் கொள்ளாமலும்
மோகம் என்று சொல்லாமலும்
சுத்தமாகச் சிரித்துக் கலைவோமே அப்படி…
பிடிக்கா விட்டாலும்
பிடிக்கவில்லை என்று சொல்லாமலும்…
பிடித்திருந்தாலும் பிடித்திருக்கிறது என்று
காட்டாமலும்…
விலகி விலகி நடந்தோமே அப்படி…
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
அப்படி அப்படியே இருந்திருந்தால்…?
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment