கவிதை

கலைவாணர் நினைவாலயம்

50views
கலைவாணர் வீடு …
அது கலைந்த கூடாகி நாளாயிற்று …
மதுர பவனம்
துயர பவனமாகி ஆண்டுகள் பல வாயிற்று ….
செழித்திருந்த மாளிகை
இன்று சீரழிந்து கிடக்கிறது… அவர் குடியிருந்து கோலோச்சிய கோயில்
குற்றுயிராய்க் கிடக்கிறது …
கலை மாளிகைதான் அன்று …
ஆனால் இன்றோ
கலையும் நிலையும்
குலைந்த மாளிகை…
கலை உலகில் கோலோச்சியவன்
மறைந்து போன
சில ஆண்டுகளிலேயே
கரைந்து போனது இந்த மாளிகையும்…
அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம் …
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றொரு நாள் மீண்டும்
சென்று பார்த்தேன் …
குற்றுயிரும் குலையுயிருமாக மதுர பவனம் மாறிக்கிடக்கிறது.. ஆங்காங்கே
பாலைவனம் போல்
படர்ந்தும் விரிந்தும்
பற்பல செடிகள் கொடிகள் முட்புதர்கள் மூடி இருக்கிறது.. வாரேல் எங்களைப் பாரேல்
என்று பறக்கும் சேலை வேட்டிகள் துணிகள்
காய்ந்து கிடக்கிறது …
கவனிப்பாரற்ற வாடகைக் குடியிருப்பு போல வாடிக்கிடக்கிறது….
சிதைந்தும் தகர்ந்தும்
பெயர்ந்தும் இடிந்தும்
அகோரத் தழும்புகளோடு
அல்லாடிக் கிடக்கிறது…
நெஞ்சம் ஒரு நிமிடம் கனத்தது கொடி கட்டிய நாட்டில் கொடிகட்டி வாழ்ந்த
ஒரு மாபெரும் கலைஞனின் கோயில்
மீண்டும் சென்று பார்க்க
மனம் வரவில்லை…
அன்று எம்ஜிஆர்
கலைவாணர் வீட்டை ஏலத்திலிருந்து
மீட்டெடுத்தார் …
கலைஞர் இல்லை இப்போது… கலைஞரின் மகன் தளபதி
முதல்வர் அறிவார்
கலைஞர் கலைவாணர் மகிமை…
முதல்வருக்கோர் விண்ணப்பம்
காலத்தின் கோரப்பற்களில் சிக்காமல்
கலைவாணர் இல்லத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.. ஒரு மண்டபம் ஆக்கிப் புனரமைக்க வேண்டும் …
அரசு நினைவாலயமாக மாற்றிட வேண்டும்
சின்னக் கோரிக்கைதான்…
கலைஞருக்கு முதன் முதலில் வாகனம் வாங்கித் தந்தவர்
வீட்டை நோக்கி
அரசு வாகனங்கள் பல
தொடர்ந்து படை எடுக்க வேண்டும் …
அதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டாக வேண்டும்… கலைஞர் போல
கலைவாணரும் முக்கியமானவர்
அத்தாவுல்லா
நாகர்கோவில்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!