75
உனக்கும் எனக்கும் இடையில்
சிறைப்பட்டுக் கிடக்கும்
வார்த்தைகள்
மவுனத்தின் மரணத்தை
வேண்டுகின்றன…
அவிழ்ந்து கிடக்கும்
கும்மிருட்டிலும்…
இடறும் கால்
முட்டி நுனியிலும்…
பிளக்கும் பூமியின்
பல்லிடுக்கிலும்…
உதிர்ந்து உருளும்
ஒற்றை மயிரின்
குழம்பு ஒட்டிய
உடலிலும்…
தேய்ந்து போன
பிடிவாதத்தின் தேகம் மெலிந்த தீச்சுவாலையிலும்…
ஒளிந்து நெளிந்து
ஒடிந்து போய்
நடுங்கி உளறும்
நலம் விசாரிப்பிலும்…
தேடுவதையே மறந்து
பாதை எங்கும்
நிலைக்குத்தி
நின்று உன்
வாசம் பார்க்க புரளும்
பார்வையிலும்…
உன் நினைப்பை விரிச்சி
உயிரை மடக்கி
உச்சி முகரும் மோகத்திலும்…
பசி அடைத்து
உண்ண முடியா
பருக்கையிலும்
உன் முகத்தப் பார்த்து
வீசி எறிந்த
சோற்றுக் கூட்டத்திலும்…
இழுத்து இழுத்து
சாவைப் பிடித்து
சங்கு குழியில்
நிறுத்தயிலும்…
வார்த்தை வந்து வந்து
எட்டிப் பார்க்குது
மவுனத்தின் மரணத்தை!
ஆ.விஜயலெட்சுமி
add a comment