27
இருத்தல் முக்கியம்…
நீ நீயாக இரு…
மற்றவர் சுமை சுமக்கும்
வேறாக அல்லாத நீயாக…
யாருக்காகவும் எப்போதும் மாறிப் போகாத நீயாக …
மாசுகளின் துக்கமாக அல்ல மாண்புகளின் பக்கமாக…
வாழ்க்கை முக்கியம்…
வந்து போவதல்ல வாழ்க்கை… வீண் வேடிக்கை இல்லைதான்… விளையாடத் தேவையில்லை… வினையாடல்கள் வேண்டும்…
வினைதான் ஆடவர்க்கு உயிர்.. திரைகடல் ஓடியும் திரவியம் தேட இப்போதெல்லாம் கப்பல் ஏறிப்போகத் தேவையில்லை… ஒரு கணிணி இருந்தாலே போதும்…
இறப்புக்கு பிறகும் உலகம்
இறந்து போனவர்களைப் பேசுகிறது…
உலகம் எப்போதும் அப்படித்தான்..
எடுத்துப் பாரேன்
ஒரு கலிலியோ …
ஒரு நியூட்டன்…
ஒரு காரல் மார்க்ஸ் …
ஒரு தெரசா…
ஒரு பெரியார் …
ஒரு பேரறிஞர் அண்ணா ….
ஒவ்வொரு நாளும் பிறந்து புத்தொளி வீசும் சூரியன்… தேய்ந்தும் வளர்ந்தும் பாடம் சொல்லும் சந்திரன்…
ஓடியும் தளர்ந்தும் நீர் பெருக்கும் நதிகள் …
நாம் நகராமல் இருந்தாலும்
பூமி நகராமல் இருக்க
பிடிமானமான மலை முளைகள்…
ஒவ்வொன்றும் இருத்தலைத் தக்க வைக்கும் இருப்புகள்..
வற்றிப் போனாலும் நதி நடந்த தடம்போல் தடம்பதி…
புதைந்து போனாலும் தொல்பொருள் துறை மீட்டெடுக்கும் பழம் பொருள் பேசுகிறது
நேற்றைய இருப்புகளை…
வரலாறுகளாகக் காட்டுகிறது…
நாளையும் நீ பேசப்பட வேண்டும் என்றால்
இன்றே உறுதி செய்
உன்னுடைய இருப்பை…
இன்றைய மதிப்பாக…
நாளைய வரலாற்றுத் தொகுப்பாக….
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment