30
கவிதை : 1
அசலைவிட எப்போதும் தூக்கலாகத்திமிறுகின்றன இந்தப்போலிகள்
வெளுத்ததெல்லாம் பாலாக இந்த கள்ளிப்பால்…
தலையில் பூச்சூடி வந்தாலும்
காட்டிக்கொடுத்து விடுகிறது காய்வுகளின் வாசனை ..
அடிக்கடி மென்மைகளைச் சீண்டுவதும்
பொய்மைகளைத் தூண்டுவதும் உண்டுதான்…
ஆனாலும் உண்மையின் அடர்த்திகள் பக்குவம் பெற்றவை …
எந்த மழை நீரிலும் அவை கரைந்து போவதில்லை…
எதனைக்கொண்டும் அந்த உண்மையை மாற்ற முடிவதில்லை ..
அம்புகளைக்கொண்டும் வம்புகளைக்கொண்டும் தோலுரிக்க முடிவதில்லை…
அவையவை இயல்புகளின் இருப்புகளிலேயே
இருந்து சிரிக்கின்றன…
புழுதிக்காற்றிலும் …
புயலோடு கூடிய மழையிலும் …
காட்டாறாய்ப் பெருகும் வெள்ளப்பிரளயத்திலும் நின்று முகம் காட்டும்
அந்த வேர்களின் மெய் வீரியங்கள்
வேடங்கள் தாங்கி வரும் போலிகளிடம் இல்லை…
கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள்…
அது நிர்வாணத்திலும் நிதானமாகச் சிரிக்கும்…
நீல ஆடை உரிக்க முடியாத வானம் …
மேகம் மூடாத நிலா…
அலையடிக்காத அழகு நதி…
இலை மூடிக்கொள்ளாத கனி …
இப்படி ஒவ்வொன்றாய் எண்ணலாம்…
ஓராயிரம் சொல்லலாம்…
என்றாலும் எல்லாம் இயற்கை…
ஊழிப்பெருங்காற்றிலும்
உட்கார்ந்த இடமிருந்தே
தலை குனிந்து சிரிக்கும் நாணல் …
இயற்கையின் சீதனம்
இழந்தவெல்லாம் போலிகள் ..
பூக்களில் மட்டுமன்று –
பொய்மை வாழ்க்கையிலும்தான்…
காகிதப்பூக்கள் கொண்டு மாலைகள் கட்டலாம்…
மங்கல வாழ்வைக் கட்ட முடியாது…
குழந்தையின் தலையில் சூட்டலாம்…
குமரியின் தலையில் சூட முடியாது…
அழகுக்காக வைக்கலாம் – அதில்
இன்பத்தின் மகிழ்ச்சியையும்
அன்பின் குளிர்ச்சியையும்
இணைக்க முடியாது…
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment