44
கொஞ்சம் தேசம்…
கொஞ்சம் நேசம்…
கொஞ்சம் ஈரம்…
கொஞ்சம் வீரம்…
கொஞ்சம் போதை…
கொஞ்சம் மேதை…
கொஞ்சம் ஏழ்மை…
கொஞ்சம் கவிதை…
ஒரு தலைக்கட்டு…
ஒரு முறுக்கு மீசை…
இந்தக் கலவையைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்…
உங்கள் கண்களுக்கு
பாரதி தெரிவான்…
நீர், நிலம், காற்று என்பது போல்
நெருப்பும் ஒரு பூதம்…
பஞ்ச பூதங்களில் ஒரு பூதம்…
தன் கைப்பிடியில் பற்றுவோரை எல்லாம்
பஸ்பமாக்கி விடுவது என்பதே அதன் வேதம்…
சிறு பொறிதான்… பஞ்சில் பட்டால்
வேகத்தின் வெறிதான்…
பாரதியும் ஒரு பொறி… தீப்பொறி…
அவனுக்குள் பற்றிக் கொண்டவை பல…
அவனைச் சுற்றி
நின்றவை சில..
விடுதலை வேட்கையும்
தமிழ் தாகமும்
அவற்றுள் ஒரு வகை…
அவன் காலச் சூழலின் ஏணி
ஏற்றிய கவிஞானி…
செல்லுமிடமெல்லாம் அவன் அதனைப் பற்ற வைத்தான்…
பற்ற வைத்து பற்ற வைத்துக்
கொஞ்சம் முற்ற வைத்தான்…
முற்ற வைத்து முற்றமெங்கும்
அதைச் சுற்ற வைத்தான்…
இவன் ஒரு புரட்சிப்பொறி…
சமய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடினான்…
சனாதனக் கேடுகளைத் தீதென்று பாடினான்… கொடுந்தீமைகள் கண்டால்
பத்ர காளிபோலே
வேகம் வந்து ஆடினான்….
ஆயிரம் தெய்வங்களை
அழைக்கின்ற கேடர்களை
இவன் தீப்பந்தக் கவிதை
சுட்டுப் போட்டது…
பூணூல் பார்ப்பானை ஐயரெனப் போற்றும்
வேண்டா சாத்திரத்தைப் பொசுக்கிப் போட்டது…
சாதனத்தின் பகைவன்…
காக்கைக் குருவிகளுக்கும்
சமத்துவச் சாமரம்
வீசும் கலைஞன்…
காடு, மலைகளையும் கவிதை உறவாய்க் கண்டு பேசியவன்…
அவன் பாடிய பாட்டுக்குள் அக்கினிக் குஞ்சும் இருந்தது…
தானாகப் பற்றியெரியும் பாஸ்பரஸ் போல்
அடிக்கடி அது
பற்றிக் கொண்டு எரிந்தது… அதனால் சில
பார்ப்பன மனங்களும் எரிந்தது…தங்களை மிக
உயர்ந்தவர் என்று தருக்கிய எண்ணம்
மணற்கூடாகிச் சரிந்தது…
சேனைகளின்றி கவிதைப் படையுடன் வலம் வந்தான்…
ஆனைக்காலில் அடிபட்டு அகாலமாய் உடைந்தான்…
செந்தீ சுவைத்து அமரரானான்…
சாகாத கவிதைகளால் உயரமானான்…
தீப்பொறி எப்போதும் மேல் நோக்கி நின்றுதான் எரியும்…
பாரதி என்பதை…
பார்… தீ என்று
சொல்லிப் பாருங்கள்…
அவன் பெயரும்
பொறிபோல் கனன்று
பற்றி எரிவது தெரியும்…
நேற்று பாரதி நினைவு நாள்…
( பாரதி பற்றி வெளிநாட்டு வானொலியில் பாடிய ஒரு கவிதை….)
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment