68
தேயாத வானம் தெளிவான நன்னீர்
தேறி வரும் பல்கலையின் ஞானம்
ஓயாத உழைப்பு உற்சாகத்துள்ளல்
ஊற்றி வைத்த உறை மோரின் குளுமை
சாயாத பணிகள் சத்தான சேவை
சமுதாயம் மொழியினம் என்று
காயாத தென்னாட்டு கங்கை போல் ஆனான்
காட்டுகிற பேருழைப்புச் சான்றான் …
எளிதாக இல்லை எதுவுமே அங்கே
ஏராளம் தொல்லைகள் கண்டான்
முளைவிட்டபோது முன்வந்து கற்கத்
தடைபட்டத் தடைகளை வென்றான்
முழுதாகச் சாதி முற்றான போது மூண்டெழுந் ததன் வேர் கொன்றான்
பழுதென்று கண்ட பஞ்சாங்கம் எல்லாம்
பாதையில் தடை போட வென்றான் …
ஆயிரம் பொங்கிடும் அவனுடை மனதின்
ஆசைகள் அனைத்தும் கண்டு பாதையை அமைத்துத் தந்தது தமிழின் திரைப்படத்துறைதான் அன்று
பாயிரம் போலக் காவியம் முன்னுரை கதை வசனங்கள் கண்டு
ஓவியமானான் உயர்ந்தான் வாழ்வில்
உறுதுணை அறிவினைக் கொண்டு…
குடியரசினிலும் விடுதலை என்றும்
முரசொலி என்றும்
முழங்கிப்
பொடிபடக் கிடந்தவர் புழுதியாய் பட்டவர்
நெறிபடும் கொள்கைகள் வழங்கி
இடித்தவர் தடைகள் எழுந்தெதிர் சென்று இயக்கினன் ஆயுதம் அறிவாம்
திடுக்கிட்டெழுந்த திருடரைப் போலவே
திகைத்தனர் திராவிடம் வரவாம் ….
போலிக் கொள்கைகள் புறம் வைத்தெரித்தான்
புதுமையின் பாதையில் நின்று புண்ணியர் பெரியார் கண்ணியர் அண்ணா
புது வழிக் கொள்கைகள் கண்டு
வேலியிட்டிருத்திய வேண்டா தன்மைகள்
வெந்தணல் நெருப்பினில் சாக
சீலமாய் ஆண்டான் செந்தமிழ் நாடு
செம்மொழி உயர் மொழியாக…
தாழ்ந்தவர் தடுக்கப்பட்டவர் உயர்ந்தார்
தலை நிமிர்ந்தெழுந்தார் நடந்தார்
சூழ்ந்தவர் பகைவர் சூதினர் முன்னே
சூரியன் போலவே கடந்தான்
ஆழ்ந்தவர் அறிவின் தீட்சணத் தெளிவார்
ஆயிரம் நன்மைகள் செய்தார்
வீழ்ந்தனர் கொடியார் வேரறு மரம்போல் வென்றனர் கலைஞர் கோவே…
உழைத்தனன் உழைத்தனன் உழைத்தவன் உழைத்து
உயர்த்தியதெல்லா தமிழாம்
களைத்தவர் வாழ்வில் கிடைத்திட வேண்டி
இழைத்தனர் சட்டம் நலமாம்
பிழைத்தனர் தமிழர் ஒடுக்கப்பட்டோர் பிற்படு இனத்தவர் கீழோர்
அழைத்தவன் அழைப்பில் உறங்குகின்றானவன் ஓய்வெடுத் துறங்குக நலமாய் …
( வானொலிக் கவிதையாக வெளிவந்த கவிதை )
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment