236
சுதந்திரமாம்.. சுதந்திரம் சோக்காளிக்கு விளம்பரம்
ஏழைக்கேது சுதந்திரம் இயலாமைதான் நிரந்தரம்
பொய்யும் புரட்டும் கலப்படம் பொதுவில் நில்லா சுதந்திரம்
வாயும் பேச்சும் பொய்யிடம் வருமானங்கள் காசிடம்
ஊரு பேச உறங்கலில் உயர்வுகளோ தாழ்மையில்
கவலையில்லார் வரவிலே நாடு முழுக்க கீழ்நிலையில்..
இருந்ததெல்லாம் போனது இருப்புகளோ காலினில்
வளமையென்ற பேச்சிலே வரிகள் தானே காய்ச்சலில்..
இருப்பவரை சுரண்டியே ஏழையாக்கும் முயற்சிகள்?!
இல்லாதவர் பேசவே அடிக்கும் நடிப்பு கூத்துகள்
வாழ ஒரு வழியில்லே வாழ்கையிங்கு நிலையில்லே..
பறித்துத் தின்னும் பலருமாய் பாதையெங்கும் வரியிலே
கூலிக்கென்று அலைவோர்கள் கொஞ்சம் இல்லை மக்களே
கொடுமை போல எங்கும் எங்கும் நமக்கு இல்லை தொழில்களே..
உடமையெல்லாம் இழந்துவிட்டு வேலைக்கென்று அலைதலே
உரிமை நாட்டு விடுதலையோ போனதெங்கோ தெரியலே..
வாங்க வாங்க பொருள்கள் எல்லாம் விலைவாசி ஏறலே
வறுமை என்ற ஒன்றுமட்டும் தீர்ந்த வழி காணலே
ஆசைப்பட்ட எல்லோருமே அரசியல்யென்ற தேரிலே
ஆன பின்னால் கொடியேற்ற துன்பம் தானே போகலே..
மாறிமாறி ஆட்சி வந்தும் துயரந்தானே நாட்டிலே
மறுத்துப் போன பேர்களிடம் சொல்ல காதும் கேட்கலே
அடிமைநாடு விடுதலையால் பெற்றதென்ன தெரியலே..
அடுத்தடுத்து குற்றஞ்சொல்லி வாழ்பவரே தலையிலே
போதுமென்று சொல்வதற்கு யாரும் இல்லை முடிவிலே..
இருப்பவற்றை தேடி நின்றால் கண்கள் காணமுடியலே!
போகப்போக போய்விடுமாய் இரவு இன்னும் விடியலே
பொய்க்களவு மகுடம் சூட போய்விடவா விடுதலை?!
ஆட்சிமொழி தமிழின்றி ஏற்றம் என்றா விடுதலை?
ஆளவந்தார் என்பவர்க்கு நம் நிலமோ தருதலை?
ஊரு வாழ உழைத்தலின்றி எப்படியாம் பொதுநலம்?
உண்பவரே உண்ண நிற்கும் அவலம் தானே பதவியிலே..
போட்டு விட்டுப் போக வேண்டும் பதவிக்கது விடுதலை!
புகழ்மணக்க செய்தவர்கள் தொடர்வதல்ல விடுதலை..
ஆசை கொண்ட பேர்கள் வந்து திணிப்பதல்ல விடுதலை
ஆகும் காலம் தலைமுறைகள் ஆள்வதல்ல விடுதலை..
கற்றுத்தேற மக்களெல்லாம் வாழ்வுயர விடுதலை!
கடைக்கோடி மக்களெல்லாம் சுகம் பெறவே விடுதலை!
விதியை நொந்து வாழ்வதல்ல விரும்பும் உயர் விடுதலை!
வேல் பிடித்த கைகளோடு வெற்றி கொள்ள விடுதலை!
அறம் காக்க எழுந்து நின்று புகழ் பேசும் விடுதலை!
அச்சமின்றி மக்களெல்லாம் நலம் காண விடுதலை!
கவர்ச்சியின்றி நடைபோடும் நட்புறவு விடுதலை!
கவலை கொண்டோர் வந்து நிற்க காவலது விடுதலை!
நாம் எல்லாம் ஒன்று என கை கோர்ப்பு விடுதலை!
நலமறியா பேர்களுக்கும் கைகொடுப்பு விடுதலை!
அடிமை யெண்ணம் விட்டொழித்து ஆளுமை கொள்ள விடுதலை!
அதட்டல் பேச்சு முறைத்தல் எல்லாம் போய்விடவே விடுதலை!
பலரும் காண பகிருதலாம் மக்களாட்சி விடுதலை
பல நாடும் புகழ்ந்து பேச தன்னுரிமை விடுதலை!
பாவலர் மு இராமச்சந்திரன், தலைவர் தமிழர் தன்னுரிமை கட்சி
add a comment