256
இன்றைய விடியல் அரசுக்கு
அவர்தான் ஒளிக்கதிர்…
உழைத்து முடித்தவர்க்கும் புதிய உற்சாகம் …
குடிசைகளைக் கோட்டையை நோக்கித் திருப்பிய குதூகலம் …
மிடிமைப்பட்டவர்க்கான மீட்சி அரசியல்…
பெயர் தெரியாத ஒரு பழங்கிராமத்தின்
ஒற்றைப்புள்ளிதான்…
ஆனால் இந்திய அரசியல் வரைபடத்தில்
அவர்தான் அதிகக் கோலங்களை வரைந்தார்..
சமக்கிருதம் கலந்த அன்றைய
தமிழுக்கு அவர்தான் சத்துணவு தந்தார்…அதை
நாடகமாகவும் திரைக்கதை வசனங்களாகவும் ஊட்டியும் தீட்டியும் உயிர்பெற வைத்தார்…
பெரியார் அண்ணாவுக்குச் சீடர்தான்…எனினும்
இருவரையும் தாண்டிப்பாய்ந்த வீரர்தான்…
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமன்று – அதிகாரங்கள் பறித்து
ஒடுக்கப்பட்ட மாநிலங்களுக்கும் அவர்தான்
உணர்ச்சிகளை ஊட்டினார்..
அதை மாநில சுயாட்சி வழியாகப்பாய்ச்சினார் …
தேசீயக்கொடிகளுக்காக வெறும் கைகளை மட்டும் அசைத்தக்கைகளை
அதே தேசீயக்கொடிகளை
ஏற்றவும் வைத்தது அவர் கை …
அவர்தான் உலகின்
மூத்த தமிழைச் செம்மொழியாக்கிய தமிழின் நம்பிக்கை…
உடன்பிறப்பே எனும் ஒற்றை வார்த்தையில்
கோடித்தமிழர்களை உயிர்பெற வைத்த மந்திரச்சொல்…
வெறும் மந்திரத்தால் மாங்காய் வரும் எனும்
வைதீகத்தின் மீது வீசி எறியப்பட்ட பகுத்தறிவு வெடிக்கல்…
அவர் மனிதனுக்காக
ஆத்திகம் பேசிய நாத்திகப்பெரியார் ..
ஓடாமல் நின்ற திருவாரூர்த்தேரை
ஓட்டிக்காட்டிய ஆன்மிக ஆழ்வார்…
வெறும் சுண்டல் உண்ட வாய்க்கு
மண்டல் தந்த மகத்தான வீரன்…தன்
சாவுக்குப்பிறகும் இட ஒதுக்கீட்டுக்காகப்
போராடி வென்ற மகத்தான தீரன் …
அத்தாவுல்லா
நாகர்கோவில்…
(தமிழ் படைப்பாளர் பேரவை / சகாப்தம் பதிப்பகம் வெளியிட்ட கலைஞர் பற்றிய கவிதை தொகுப்புக்காக எழுதப்பட்ட கவிதை …)
add a comment