117views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாடு
ஒற்றை விரல் புரட்சியின்
ஒப்பற்ற நாடு…
இப்போதெல்லாம்
மைகள் கலைந்து விடுகிறதோ
எனும் அச்சம்…
உண்மை…
வெவ்வேறு கலாச்சார
பண்பாட்டு மக்களின் பன்மை…
இந்தியர் எனும் ஒற்றுமை
எனும் பல்வேறு மைகள்
விரவிக் கிடக்கும் புதுமை
எங்கள் இந்தியம்…
அன்று வெற்றி பெற்றது
எங்கள் வாய்மை
என்றார் அண்ணா..
ஆம் எங்கள்
வாய்ப் பேச்சின் உண்மையும்
மை எழுத்துமான மெய்மையும்
என்றார் அவர்…
இன்றும் அப்படித்தான்
நன்மைகளைப் பேசியும்
நாட்டு மக்களுக்குச் செய்யும்
நன்மைச் செயல்களை
எழுத்து வடிவில்
எழுதிக் காட்டியும்
பல்வேறு கட்சிகள் மோதுகின்றன…
ஏதேதோ தவறாகவும்
மக்கள் காதுகளில் ஓதுகின்றன…
பேதங்களும் பேசுகின்றன…
என்றாலும்
நாட்டு மக்கள் நல்லவர்கள்
நாகரிகம் தெரிந்தவர்கள்…
யார் நம்மை ஆள வேண்டும்
என்பதில் அக்கறை கொண்டவர்கள்…
ஆனால் ஜனநாயகம் என்பது
சரியான பாதையைக் காட்டினாலும்
சில தனிநாயகத் தன்மைகளும்
பணநாயகப் பண்புகளும்
மக்கள் மனநாயகப் பணிகளை
மறுபரிசீலனை செய்ய
வைத்து விடுகின்றன…
நேற்றும்
நடைபெற்று இருக்கிறது
ஒரு புரட்சி…
உலகமே உற்று கவனிக்கும்
இந்தப் புரட்சியின் விடியல்
அடுத்த வாரம்தான்
வெளிச்சத்துக்கு வருகிறது…
தமிழகம் மட்டுமன்றி
இந்தியாவே உதித்து வரட்டும்…
விடிந்து வரட்டும்…
வெளிச்சமாகவே வரட்டும்…
add a comment






