54views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
ஆழத் தோண்டுகிற போதெல்லாம்
அகப்படுகின்றன
மூத்த தமிழ்க்குடி
ஆண்ட அரண்மனைகளின்
பழங்கால்கள்…
பழந்தமிழர் வாழத் தோண்டிய
நாகரிகச் சின்னங்கள்…
சூழ இருப்பவை
பல வகைச் சுண்ணங்கள்…
கொடி கட்டி வாழ்ந்தான்
எனக் காட்டி வைக்கும் எண்ணங்கள்…
சிந்து நதிக்கரைகள்
துளிகள் சிந்து முன்பே
அவற்றை
முந்து நதிக்கரைகளாக
முன்னிற்கின்றன
தமிழன் சொந்தக் கரைகள்
நாகரீக களங்கள்….
பூமியில்தான் என்றாலும்
கீழே கீழே தோண்டுந்தோறும்
மேலே மேலே ஏறுகின்றான்
திராவிடத் தமிழன்…
நூலிடை வெளிகள் எனும்
ஆரிய சனாதன சூழ்ச்சிகள்
தமிழர்க் காலிடை அழுந்துகின்றன…
கீழடிகள் மேலடிகளாய் எழுகின்றன…
வடவன் இமயத்தை விட
உயர்ந்து குமரிக் கோடுகள்
முந்துகின்றன…
உலகுக்கே மூத்தவள்
எங்கள் தமிழ்த்தாய் என்று
எட்டுத்திக்குகளும்
முரசுகள் கொட்டுகின்றன…
தமிழன் புகழ்
உலக அரங்குகளை எட்டுகின்றன…
இவை காலம் செதுக்கிய
கல்வெட்டுக்கள்…
ஆங்காங்கே இப்போது
எகிப்து பிரமிடுகளையும் தாண்டிய
சிகைக் கொற்றவன்
சொல்வெட்டுக்கள்..
தமிழ் நாகரீகத்தின்
புதிய வெல் வெட்டுக்கள்
காலம் காட்டித் தந்திருக்கும்
அழகிய பழைய
தொல்வெட்டுக்கள்…
தாய்மொழி நாளை
இனிமேல்
மூத்த தமிழ் மொழி நாளாய்க்
கொண்டாடுவோம்…
புதிய பண்பாடுவோம்…
add a comment






