71views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
ஒவ்வொரு
குழந்தைக்குமான அறிவிப்பு..
ஒவ்வொரு
குடும்பத்துக்குமான எச்சரிக்கை…
பொத்திப் பொத்தி வளர்க்கின்ற
கிளிக்குஞ்சுகளின்
இறகு கிழித்து இம்சை செய்து
இச்சைக்கு உட்படுத்தும்
இழி முகங்களின்
காமக் களியாட்டங்கள்…
தலைகளாக நினைத்தவர்கள்
தறுதலைகளாக…
உத்தமர்களாக
உலா வந்தவர்கள்
உதவாக்கரைகளாக…
மானுட நேயர்களாக நினைந்தவர்கள்
இடுகாட்டுப் பேய்களாக…
நாகரிக வழிகாட்டிகள்
என்று நம்பியவர்கள்
நாய் நரிகளை விடக் கேவலமாக…
செல்வந்தர்களின் செல்வங்கள்
ஏழைகளுக்கான பகிர்தல்கள்தாம்…
ஆனால் இந்த
ஈனப்பிறவிகளோ
செல்வம் காட்டி
சீரழித்திருக்கிறார்கள்…
சின்னப் புறாக்களை…
செல்வக் குழந்தைகளை
சின்னஞ்சிறுசுகளை…
இவர்களுடைய விடுமுறை
ஈவு நாட்கள் எல்லாம்
தனித் தீவு நாட்கள்…
தண்டிக்க வேண்டியவர்களே
தண்டனைக்குரியவர்கள்
ஆகிறார்கள்…
காலம் எப்போதும்
ஒரு கொடிய ஆயுதம்…
அதன் மறுபுறம்
எப்புறம் திரும்பும்
எப்போது திரும்பும்
என்று யாருக்கும்
கணிக்க முடிவதில்லை…
ஆயினும் திரும்பும்…
சிவனுடைய நெற்றிக்கண்ணை
நம்புகிறானோ இல்லையோ
பாதிக்கப்பட்ட
பிஞ்சுக் குழந்தைகளான
ஜீவன்களின் நெற்றிக்கண்களை
நம்புகிறேன்..
காலம் சற்றுப் பிந்தினாலும்
அது நிச்சயம் சுடும்…
add a comment






