கவிதை

ஞானத்தின் வாசல்கள்…

76views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
ஞானத்தின் வாசல்கள்
நாகரீகமானவை…
இன்னா செய்தார்க்கும்
இனிய செய்யும்…
பொல்லா மனத்தார்க்கும்
பூக்களை வழங்கும்…
சாணி எறிந்தவர்க்கும்
சந்தணம் பூசும்…
பிச்சைகளுக்கு மட்டுமல்ல…
அது எச்சைகளுக்கும் இரங்கும்…
வாய் கூசாமல்
பேசுபவனுக்கும்
பெற்ற
தாய் கூசுமளவுக்கு
பேசுபவனுக்கும் சோறு போடும்…
அவன் மானுடத்தைக்
கூறு போடும்
சேறு மனம் கண்டும் சினப்படாது
அவன் சிரமம் கண்டு அதனை
தூக்கிப் போடும் …
அவன் உயிர் பிழைத்து வாழ
ஒரு பாதை போடும்…
அனாதை குழந்தைகளுக்காக
இருகரம் ஏந்தியபோது
எச்சில் துப்பிய
ஈன மனத்தவன் மீதும் ஈரம் காட்டும்…
தன்மேல் கல்லெறிந்தவனுக்கும்
கைகுட்டை தந்து
கண்ணீர் துடைக்கும்…
கெட்ட வார்த்தை வீசுபவன்
கெட்ட வார்த்தைகளை
அவனிடமே விட்டு
எட்ட நடக்கும்
இது ஒரு ஆன்ம ஞானம்…
நஞ்சு பெயக்கண்டும்
நாகரிகமாய் உண்ணும்..
எச்சைகளுக்கு
இரங்குவதும்
ஈரப்பண்புதான்…
அவன் எச்சில் மலம் எடுத்து
அவனுக்குப் பூசுவதை விடவும்
இது ஆயிரம் மடங்கு மேலானது…
அவன் மனிதனாக இருந்தால்
இந்த ஒரு உதவியே
அவன் சாகாமல் சாகக்
கொன்று போடும்…
ஆகவே…
ஞானம் பயிலுங்கள் நண்பர்களே…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!