கவிதை

அறிவுத்தீ பரவட்டும்

106views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
புத்தகம் என்பது
அறிவின் வாசல்…
புதிய புதிய சாளரங்கள்
திறக்கும் அறிவின் ஒளித்துளி…
காலைப் பறவைகளின்
சங்கீத இசை போல்
மனங்களில் எழுப்பும்
புதுப்புது ராகம்…
போகியைப் போல்
பழுத்த புழுத்த பஞ்சாங்க
பழங்கதைள் எரிக்கும்…
வீட்டில் மட்டுமல்ல குப்பை…
மனதிலும் எண்ணங்கள்
மூளையிலும் நாட்டிலும் சேரும்…
அந்த நலிவுகள் அகற்று…
சாதி சனாதனச் சழக்கெரி…
பல வருணப் பாகுபாட்டுப்
பிறப்புக்கதையெரி…
சர்க்கரை பொங்கல் போல்
சந்தோஷம் நிரப்பும்…
மாட்டுப் பொங்கல் போல்
மாற்றுயிர்களின்
மகத்துவமும் போற்றும்…
காளை அடக்கிக்
கன்னியை மணக்கும்…
புதுப்புது
யோசனைகள் புல்லாங்குழல்
இசைமயங்கள்…
பழைய
மதுக்கலய மயக்கம்
இல்லாத சங்கத்தேறல்…
யாதும் ஊராய்
யாவரும்உறவாய்
தீது தவிர்க்கும்
பூ மனத்தேற்றல்
புராணப் பொய்கள்
புழுகுகள்களைக் கொளுத்தும்
பகுத்தறிவு நெருப்பு…
நிலா காட்டிச் சோறூட்டும்
குழந்தை முகங்களின்
ஆனந்தக் களிப்பு…
அரண்மனை முற்றங்களும்
அந்தப் புரங்களும்
வரன்முறை கடந்த வசந்தத் தென்றலும்
கசந்த மனங்களில் கசப்புகள் நீக்கும்
மாலைத் தென்றலும்
மழைநீர்ச் சாரலுமாய்…
கோடையிலும் சுகமுண்டு..
குளிரிலும் இதமுண்டு…
ஆகுமானவற்றை
நெஞ்சோடு அணைக்கும்..
மனிதாபிமானங்களின் மேல்
மலர்ச்சொரியும்…
மதாபிமானங்களின் மீது
கொள்ளி எறியும்…
மானுட
சந்தோசங்களை நிறைக்கும்…
படி புத்தகம் படி…
உலகம் படி…
உனக்குள் இன்னும் பலப்படி…
இன்னும் முன்னேறு…
அதன்வழி
உலகம் உனக்குத்
திறக்கும் வழி…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!