கவிதை

புத்தாண்டு வாழ்த்துக்கள்

106views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
இன்பமும் நன்மைகளும்
எங்கெங்கும் நிறையட்டும்…
துன்பங்கள் தொல்லைகள்
தூரப்போய் ஒழியட்டும்…
கனிவுகள் கருணைகளால்
குவலயம் செழிக்கட்டும்…
கவலைகள் நோய்நொடிகள்
காணாமல் தொலையட்டும்…
போர்ப்பாட்டுப் பூசல்கள்
பூமிக்குள் புதையட்டும்…
நீர்ப்பாட்டு வேர்ப்பாட்டால்
விளைச்சல்கள் பெருகட்டும்..
எத்திப் பிழைக்கின்ற
இழிவுநிலை அகலட்டும்..
அவருழைப்பில் அவர்வாழும்
உயர்ந்தநிலை செழிக்கட்டும்…
கடன்வாங்கி வாழுகிற
கசப்புகள் அகலட்டும்…
உடன்பிறப்பாய் பிறரெண்ணி
உதவும்நிலை மலரட்டும்…
சழக்காறு சாதியெல்லாம்
சேற்றுக்குள் புதையட்டும்…
அழுக்காறு அழுக்குமனம்
அன்பருளால் நிறையட்டும்
பழையபொய் பழங்கதைகள்
பூமிக்குள் புதையட்டும்..
இழைநேச அன்பின்பம்
இதயங்கள் இணைக்கட்டும்..
எல்லாமும் எல்லோர்க்கும்
என்றென்றும் நிறையட்டும்…
இல்லார்கள் இனியில்லை
என்றுலகம் செழிக்கட்டும்…
மானுடரில் வேற்றுமைகள்
மாச்சரியம் மாறட்டும்…
தேனுடன்பால் தினமுண்ணும்
செழிப்புநிலை சேரட்டும்…
தொழில்துறைகள் உற்பத்தி
செல்வங்கள் பெருகட்டும்…
எழில்தேசம் என்றென்றும்
இனிமைகளாய் ஆகட்டும்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!