106views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
முரண்களின்றி
உடன்பட்டு நின்ற போதெல்லாம்
உடன்பட்டு வந்தது வாழ்க்கை..
வானத்தின் கிழிசல்கள்
மனித மன ஊத்தின் உடைசல்கள்…
நிறை செய்து காக்கும் இறைபோல்
முறை செய்து காக்கும் இயற்கை…
எப்போதும்
தப்புவதும் இல்லை
தவறுவதும் இல்லை
சூரியச் சுழற்சிகளும்
குளிர்ப்பனி வசந்தங்களும்
அவையவைக்
காலத்து
அவையவை ஆகும்… போகும்…
இயற்கையின் தீங்கில்லா
திருப்பள்ளி எழுச்சிகள்..
உலகம் புதுப்பிக்க வரும்
மலர்ச்சிகள்..
மனிதக் காலடிகள் தடுமாறி
பாவ அடிகளாய் வைக்கும் போது
கலைகிறது வாழ்வு..
மலையும் மழையும்
அலையும் கடலும்
நிலையாய் வழங்கும்
நேரியக் கொடைகள்
மனிதன்
இடறும் போதில் விளையும் தடைகள்..
மணல் கொள்ளயடித்து…
ஆற்றின் நீர்க்குழல் முறித்து…
மலை வளம் தகர்த்து
மழை வரம் தடுத்து…
புனல்களை அடைத்து
அனல் வர வைத்து…
பொன்னான எல்லாம்
புண்ணாக்கிக் கிழித்து…
இப்படி
இயற்கையோடு ஆடுகிறான் மனிதன்…
பதிலுக்குச் சீறுகிறது இயற்கை…
மாத மும்மாரிப் பொழியாமல்
மாதமும் மாறி
மரபுகளும் மாறி மணித்துளிக்குள்
அளவு கடந்து மாறிமாறிக்
கிழிக்கிறது…
அகலப்படுத்த வேண்டிய
ஏரிகள் குளங்கள்…
பலப்படுத்த வேண்டிய வயல்கள்
சோலைகள்…
நலப்படுத்த வேண்டிய
நாட்டின் அரண்கள்…
கேட்டில் வீழ்த்த கேடுகள் விளைந்தன…
இப்போதெல்லாம்
ஆண்டு முழுவதும் ஒருபுறம்
மழைப்பொழிவு…
ஆகாயமே
கழுவ முடியாமல்
ஒருபுறம் அடர்த்தியின் கழிவு…
நீரோட முடியாமல்
நிறுத்தப்பட்ட ஆறுகள்…
நெருப்பணைக்க முடியாமலே
நீறும் காடுகள்…
கூக்குரல்களும் கேவல்களும்
தாங்க முடியாத அழுகைகளும்
அவலங்களும் உயிர்பலிகளும்
பயிரழிவுகளும்
இல்லங்களில் மட்டுமல்ல…
இயற்கையின் இழப்புகளாலும்தான்…
இயற்கையும் தெய்வருள்…
அன்று கொல்லாது நின்று கொல்லும்…
இவ்வளவு மழை பெய்தும்
சமயங்களில்
நெருப்பணைக்கவும் நீரில்லை
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்
மக்கள் பெருவாழ்வாக
வாழ்ந்த பல ஊரில்லை…
இயற்கையின் பாடங்கள்…
இப்போதேனும் படியுங்கள்…
add a comment






