82views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
தவறாமல் வந்துவிடுகின்றன
தேசிய விழாக்கள்
ஆண்டாண்டு தோறும்…
அலங்கரிக்கப்பட்ட மேடைகளிலும்
ஆசீர்வதிக்கப்பட்ட கொடிகளிலும்
புதிதாய் உடுத்தும்
ஆடை அணிகளிலும்
அரசியல்வாதிகளுக்கும்
அரசியல்வாதிகளை
அடக்கி ஆளும்
கார்ப்பரேட் வாதிகளுக்கும்…
தேசிய விழாக்களைப் போலவே
இப்போது
தேர்தல் விழாக்களும்
அவ்வப்போதும்…
நினைத்தபோதெல்லாமும்….
ஒன்றியத்துடன் ஒன்றாதவர்களுக்கு
நித்திய கண்டமாம்…
தப்பி வந்தால்
சத்திய கண்டமாம்..
அதனால் என்ன
ஆடும் வரை ஆடு…
வேட்டையாடு…
விரும்பியபடி எல்லாம் விளையாடு…
என்பதுதானே
சுடுகாட்டுப் பேய் உண்ணும்
நரக மாமிசர்களின்
நரியணைச் சத்தம்..
வெடிகள் வெடித்து
அப்பாவி உயிர்கள் பறித்து
பெருங்கொலைகள் முடித்து…
பெருங்கூட்டங்கள் கலவரங்களிலும்
தப்பித்துப் பெருந்தீனிகள்
முடித்த முதலைகள்
இன்னொரு மூடியுடன்
மெல்ல நகர்கிறார்கள்
இன்னொரு மேடை நோக்கி…
இன்னொரு ஆடை
இன்னொரு ஜாடை
இன்னொரு பாகை
இன்னொரு கோஷம்
இன்னொரு மொழி
வேறு சில இலவசங்கள்…
பத்தாயிரங்களுக்கு பதில்
பதினந்து ஆயிரங்கள் இருக்கலாம்…
இருபதாயிரங்களாக உயர்த்தலாம்
என்ன வந்து விடப்போகிறது…
கடன்தொகை
தேசத்தின் தலையில்தானே
விடிகிறது..
ஆங்காங்கே
நாவில் விஷந்தடவி
நாகங்கள் வருகின்றன..
மான் தோலில் அமர்ந்து
பெண்மான் புசித்துப்பூசித்த
கமண்டலங்கள் எழுகின்றன…
கொடியேற்றத்தின்போது
கொடுக்கப்படும்
மிட்டாய்க்காகக் காத்திருக்கும்
சிறுவர்களைப் போல
இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்
சில இந்நாட்டு ஏழைகள்…
add a comment






