கவிதை

திருப்பி எழுதும் வரலாறுகள்…

134views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
வரலாற்றுப் பக்கங்களில் வாகைகள் உண்டு…
வள்ளல்கள் வாரி வழங்கிய
ஈகைகள் உண்டு…
சரித்திரங்கள் புரட்டிய பெண்மயிற்
தோகைகள் உண்டு…
மக்கள் மனங்களில் புகழொலிக்கும்
ராஜ பேரிகைகளும் உண்டு…
ராஜ கம்பீரத் தோரணைகளோடும்
அதிகார சதிகார ஆணைகளோடும்
புரவி ஆனைச் சேனைகளோடும் கோட்டைகளைக்
கட்டி ஆண்டவர்கள்
பலர் சமாதிகள்
இன்னும் ரத்த வாடையோடுதான் இருக்கின்றன…
ஆழக்குழி தோண்டிப்
புதைத்து விட்டாலும்…
நினைவுத் தூண்கள் நிறுத்திவிட்டாலும்….
அரேபிய அத்தர்கள்
போட்டுக் கழுவி விட்டாலும்…
ஆத்திர சாத்திர
மூத்திர வாடைகள் விலகாத
சுற்றுப்புறங்களைக் கேடாக்கும்
சுகாதாரக்கேட்டுச் சமாதிகள்
இன்றும் இருக்கின்றன….
அன்றாடங்காய்ச்சிகள்
ஒடுக்கப்பட்டவர்கள்
தாழ்த்தப்பட்டவர்கள்
உயிர் பிழியப்பட்டவர்களின்
குருதியில் பூசப்பட்ட
எத்தனை விலை உயர்ந்த
ஆடைகளிலும்
சாதனையின் வீச்சில்லை…
சந்தனம் போல் பூசிக்கொள்ளும்
வேடதாரிகளின்
முகங்களிலும் மார்களிலும்
சாதிச் சகதிகளின் சேறுகள்…
எத்தனை முறைகள்
மாற்றி எழுதினாலும்…
எத்தனை
அதிகார தோரணைகளோடு
விளையாட்டுச்
சிப்பாய்க் காய்களை
மாற்றி நிறுத்தினாலும்…
உங்கள் அந்தரங்க
அந்தப் புறங்களிலும்
பிணவாடைகள்தான்…
கைக்கூலிகளைக் கொண்டு
கண் கட்டலாம்
பார்வைக்குத் தெரியாமல்
நீண்ட சுவர் கட்டலாம்
கற்பழிக்கப்பட்ட பெண்களின்
சேலைகள் எடுத்து
முகம் துடைக்கலாம்…
ஆனால்
ஒன்று மட்டும் உண்மை…
நிச்சயம் உங்களால்
விலைவைக்கப்பட்ட
மற்றவர் தலைகளும்
அவர்கள் இரத்தத்தில்
பூசை செய்யப்பட்ட
கர்ப்பக்கிரகச் சிலைகளும்
ஒருநாள்.. ஒருநாள்
உங்கள் தலைவாங்கியே தீரும்…
வரலாறு
அதையும் எழுதும்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!