கவிதை

கரூர் – ஒரு கருப்புத் துயரம்

119views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
கொள்கைக் கட்டமைப்புகள்
இல்லாத
ஒரு கட்டவுட் காரனின்
கட்டவுட் சரிந்து
விழுந்து இருக்கிறது…
ஒரு நாடக
வேடதாரியின்
வேடம் கலைந்திருக்கிறது…
விவேகம்
அற்றவன் வேகம்
விழுந்திருக்கிறது…
மக்களின்
அறியாமையை
அடகு வைத்து
அரியாசனம் ஏற
ஆசைப்பட்டவனின்
அனாவசியக் கனவு
கலைக்கப்பட்டு இருக்கிறது…
எந்தச் சகுனிகளுக்கோ
பகடைக்காயாக
உருட்டப்பட்டவனின் உலகம்
உருண்டு விழுந்து இருக்கிறது…
கரை கடந்து மக்களை
அழைத்துச் செல்வேன் எனக்
கத்தியவனின் கூட்டத்தில்
திரை விழுந்திருக்கிறது…
பகுத்தறிவுச் சிந்தனையும்
முன்யோசனைகளும்
இல்லாத பக்குவப்படாத
ரசிகக் கூட்டத்தை
வழி நடத்தியவன்
வழிப்பாதையில்
கலைக்க முடியாத
கும்மிருட்டு சூழ்ந்து இருக்கிறது…
மற்றவர்களின் கைப்பாவையான
ஒரு பொய்க்கால் குதிரை
முறிந்து விழுந்து இருக்கிறது…
எல்லாம் அவனோடு
நின்று விட்டால் பரவாயில்லை…
பால்குடி மணம் மாறாத
பச்சிளம் குழந்தைகள்
பெண்கள் பெரியவர்கள் என்று
நாற்பத்தியொரு உயிர்களின்
ஆன்மாக்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றன..
ரசிகக் கூட்டத்தின்
தலையேறிக் கொடியேற்ற முனைந்த
ஒரு கொடியவனின் கரம்
தற்காலிகமாகக்
கட்டப்பட்டு இருக்கிறது…
கட்டமைக்கப்பட்ட
திரைபிம்பங்களும்
எழுதிக் கொடுத்த வசனங்களும்
எப்போதும் கூட வராது
என்பதை நாட்டு மக்கள்
இப்போது நம்பத்
தலைப்பட்டு இருக்கிறார்கள்…
தன் இயலாமை மீதும்
அறியாமை மீதும்
முன் யோசனைகள் இல்லாத
திட்டங்களின் மீதும்
கோபப்பட்டு
திருத்தத் தெரியாதவன்
அனைத்தையும்
அடுத்தவர் மீதும் அரசின் மீதும்
பழி சுமத்தி
தப்பிக்கப்
பார்க்கிறான்…
இவன் ஒருபோதும்
மக்களின் தவம் இல்லை…
இறைவன் தந்த வரமும் இல்லை..
சினிமா மோக சாபம்…
தன் நலம் காக்க
பணம் காக்க ரசிகர்களின்
உயிர் எடுக்கும் கழுகு…
திரையோடு நிற்கட்டும்
அவன் திருவிளையாடல்…
இவன் மக்களின்
பாசக்காரன் அல்ல
மோசக்காரன் என்பதை சொல்லாமல்
சொல்லி வைத்து நீதிமன்றமும்
இவன் தலையில்
குட்டி வைத்து இருக்கிறது…
இனி அவன்
எப்போதுமே தெருவுக்குள்
வர வேண்டாம் நாட்டுக்குள்ளும்…
நாட்டு மக்களுக்கு மட்டுமின்று…
அரசுக்கும்
இது ஓர்
எச்சரிக்கைதான்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!