கவிதை

அழகிய கவிதை…

95views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
ஒரு சொல் உயிர்பித்து
விடுகிறது
ஒருவர் வாழ்வை
ஒருவர் மன மகிழ்ச்சியை
ஒரு நோயாளியின்
ஒரு நாள் வாழ்வை…
கற்பனைகளும்
நினைவுகளும்
மட்டுமன்று வாழ்க்கை…
கவிதைகளின்
மொழி நயங்களும்தான்..
சிந்தனை வெளிகள்
மிகச் சிறந்தவை
எவருக்கும் கட்டுப்படாதவை
காலம் கனிந்து
செய்த கருணை
உயிர்க்கவும் உயிர்ப்பிக்கவு
மானவை
வாழ்க்கை செதுக்கல்கள்
ஓவியம் போல உயிர் நீட்டல்கள்…
தீட்டல்கள்…
பூக்களின் வேர்கள்
ஆழப் பதிய
இடம் தரும் நீர்நிலைகள்…
சமூக அநீதிகளை
அகற்றுவதற்கான
முழக்கங்கள்
இறை ஆன்மீகத்தின்
அழகிய தரிசனங்களின்
உற்சவங்கள்…
யாருக்கும் இம்மியும்
கேடு விளைவிக்காத
சத்தியத்தின்
நீர் பாய்ச்சல்கள்…
நொந்து போனவருக்கான
நோவினைகள் தீர்க்கும்
ரண சிகிச்சைகள்
மாச்சரிய பேதங்கள்
அகற்றப்படுகின்ற
ஆச்சரியப் பூச்சொரிதல்கள்…
இன மொழி நிற வேறுபாடுகள்
இல்லாத கருணைகளின்
பாலூட்டுதல்கள்…
உழைப்பாளிகளின் வியர்வை
துடைத்து விடுகிற
வெல்வெட் துணிகளாக
இல்லாமல் இருக்கலாம்…
அவர்கள்
மனக்காயங்களுக்கான
மருத்துவ
மகத்துவப் பூச்சுகள்….
தளர்வுகளை புதுப்பிக்கும்
தன்னம்பிக்கைகள்..
தளர்ந்தவருக்கான
வளர்ச்சிகளின்
முன்னெடுப்புகள்…
திக்கற்றவருக்கான
தீபாராதனை
வழிகாட்டல்கள்….
எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்…
இன்னொருவர்
உயிர் மூச்சின் நீளம்
இன்னும்
கொஞ்ச நாள்
நீட்டிக்க வைக்க முடியுமென்றால்
அதுதான் உங்களுடைய
நல்ல வார்த்தை
நல்ல சொல்
நல்ல வாழ்க்கை
நல்ல கவிதை…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!