கவிதை

கீழடி நாகரீகம்

140views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
புதைத்தவற்றில்
கிளைத்தெழுகின்றன
பழைய வேர்கள்..
புதையல்களுக்குள்
பொக்கிஷங்கள்….
நேற்று மூடி இருந்தவரை
மூடப்பட்டிருந்த வரலாறு
தோண்டிய உடன்
பீறிட்டுப் பாய்கிறது…
இது
தேவதைகள் பெயர் சூடிய
பிண நதிக்கரைகளல்ல…
ஆதிக்கரை நாகரீகங்களின்
அழுத்தமான
அழியாத கல்வெட்டுகள்…
உடைந்த
பாண்டமாக இருக்கலாம்…
ஆனால் உள்ளே
உடைபடாத கைரேகைகள்
மணல் சரிந்த மேடுகள்தான்..
ஆனால்
மனம் சரியாத மேருகள்…
ஆடு மேய்க்கும் கோவலர்
கம்புகளின் வளைந்த
முனைகளாகவும் இருக்கலாம்…
இது தான் நீங்கள்
மறைத்து வளைத்துப் போட நினைக்கும்
தமிழர் பழ நாகரிகத்தை நிமிர்த்துகிறது…
அமர்நாத்துகளை அமர்நாத்துக்கோ
கேதார்நாத்துக்கோ மாற்றினாலும் சரிதான்…
கீழடிகள்
தமிழின் நிமிர் நாற்றுக்களாகவே நிமிர்கின்றன…
இல்லாத சரஸ்வதிக்கு
நீங்கள் கொண்டை
முடிந்து கொள்கிறீர்கள்…
கீழடி ஊற்றுகளோ
உங்கள் மேலடிக் கொண்டைகளையும்
மீறிப் பாய்கிறது
காலம்
படைத்தவனைக் கைரேகைகளுக்குள்
புதைத்தே கண்ணாமூச்சிக் காட்டும்
நீங்கள் இந்தப் புண்ணிய ரேகைகளை மட்டும்
புறந்தள்ளப் பார்க்கிறீர்கள்….
ஆனால் நீங்கள் நினைப்பது போலல்ல..
இந்த வர்ணமும்
இந்தச் சாதியும் வேறு..
உங்கள் நாலுக்குள்ளும் நிற்காது…
நூல் வேலிக்குள்ளும் அடங்காது…
இது ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்றுதான் நின்று முழக்கும்…
சாதி இரண்டொழிய வேறில்லை
என்றுதான் திசைகள் கடந்தும் ஒலிக்கும்…
ஏனெனில் இது
நூலடி இல்லை… தமிழன் மேலடி…
பொய்களின் முகமூடிகளைக்
காலடியில் போட்டுப் புதைக்கும்
தமிழன் கீழடி….

1 Comment

  1. “உங்கள் நாலுக்குள்ளும் நிற்காது
    நூல்வேலிக்குள்ளும் அடங்காது ”
    சிறப்பான அடிகள்.
    கீழடியை மீண்டும் புதைக்க நினைக்கும் தீய எண்ணம் கொண்டோருக்கு செருப்படிகள்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!