18views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
வானத்தின் இருட்டை
ஓர் ஒளிப்புள்ளி
இடறி விடுகிறது …
அநீதியின் குரல்வளைகள் அறுக்கப்படும்
போதெல்லாம்
நீதியின் தேவதைகள்
ஒளி மின்னும் வாள்களோடு விரைகிறார்கள்…
சிறு வாய்க்குள்ளேயே
ஏழு உலகங்களையும்
காட்டிச்சிரித்த
மாயக்கண்ணனின் கரங்களுக்குள்
கம்சனின் தலைகள்
காணாமல் போகின்றன….
எட்டுத்திக்குகளில்
இருந்து மட்டுமல்ல …
இப்போது
எட்டாத எட்டுநூறுத்
திக்குகளில் இருந்தும்
முளைக்கிறார்கள் நவீன கம்சன்கள் ….
இருந்தாலும் என்ன?
அறியாமை
அநியாயங்களில் தொடங்கி …
அறிவியல்
பொருளியலில் வியாபித்து ….
அரசியல்
ஆன்மீகத்திலும் அல்லாடுகிறது
சன்னியாசிகளின்
போலி அரசியல்…
முறை பிறழ்ந்த நெறிகள்…
மூத்திரச் சாணத்தில்
முக்கிக் குளித்தவனுக்கும்
தேவாலயங்கள்
கதவு திறந்து
ரொட்டியும் மீனும் தரலாம்…
புயலும் மழையும்
புரட்டிப் போட்ட
அசுத்த நீர் தேங்கிய
கோவில் முற்றங்களை
தொப்பிகளும் தாடிகளும்
கழுவி விடலாம் …
பள்ளிவாசல்களில்
தொழுகை நடத்த
முடியாமல் போனால்
கோவில் முற்றங்கள் துடைத்து
வழிவிடலாம்….
எல்லோர் உள்ளுக்குள்ளும்
தேவ ஆன்மாக்கள்…
அறியாமை இருட்டுக்கள்
அகற்றப்படுகிற போதெல்லாம்
அறிவு வெளிச்சம் பிறக்கிறது…
அறிதொறும் அறியாமை
காணப்பட்டாற்போல
எல்லா உதவிகளிலும்
எட்டிப் பார்க்கும் நல்லோர்
ஈரமான நினைவுகளும் ….
இருந்தாலும் …
இந்தூர் என்றாலும்
செந்தூர் என்றாலும்
மைசூர்பாக்குகளும்,
வெற்றிலை கொட்டைப்
பாக்குகளும்
ஸ்ரீகளாக மாறி
சித்திரவதை செய்யப்படுகின்றன..
என்ன செய்வீர்கள்
அந்தப் பழைய
ஷாஹீன் பாக்குகளை ?
add a comment