38views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
ஒரு பூ புரட்டிப்போட்டு விடுகிறது
இந்தப் பூலோகத்தை …
ஒரு புன்னகை
தடுமாறச் செய்து விடுகிறது கடின மனப் பாறைகளை …
ஒரு மென்னதி
தடை மேடுகளையும் கடந்து எல்லைகளைத் தாண்டியும் பாய்கிறது
தடுப்பணைகள் இல்லாமலே….
நிலவுக்கும் கதிருக்குமான சூட்டுத் தன்மைகள் கூட
உணர முடியாமல் செய்து விடுகிறது
ஒரு நட்சத்திரச் சிதறல்…
சின்னச் சின்ன
அசைவுகளும் இசைவுகளும்
உலகையே நகர்த்திக் கொண்டிருக்கின்றன …
யார் எவருக்காகவும்
இம்மி அளவும்
இழக்கத் துணியாதவர்
ஒரு கண்ணசைவுக்குள்
கட்டிப் போடப்படுகிறார்…
தேநீர்க் கோப்பைகளை அல்ல… மொடாக் குடிகாரர்களின் தொண்டைக் குழி முடிச்சுகளை ஓர் இரட்டைச் சடைப் பின்னல் எளிதாக அவிழ்த்துப்போட்டு விடுகிறது….
ஒரு தாவணி அசைகிறது
ஒரு ராஜ மாளிகை எழுகிறது …
ஓர் அரசிளங்குமரியின்
கண்ணிமைகள் படபடக்கின்றன
நதிக்கரைகள் அழகாகின்றன…
பல நினைவுச் சின்னங்கள் எழுகின்றன….
ஒரு பூஞ்சிறகின் சுவாசம்
ஒரு பெரும் புயலாக வந்து
ஒரு குடும்பத்தையே
சிதைத்துப் போடுகிறது …
இன்னொரு புறத்தில் பிரிந்தவர்களைச்
சேர்த்து வைக்கிறது …
ஆமாம் …
அந்த முதற்கனியின் எச்சில்சுவை
இனித்து இனித்து
இவ்வுலகில் ஏதேதோ மாற்றங்களை இன்றளவும்
செய்து கொண்டேதான் இருக்கிறது…
நிலைக்கண்ணாடிகள்
நின்று நிதானிக்கின்றன …
அதன் முன்பு பல மனக்கண்ணாடிகள்
உடைந்து உடைந்து
முளைக்கின்றன …
திரை மறைவுப் பூந்துகில்களுக்குள்ளும்
இதயம் பின்னிக் கொள்கிறது…
ஒவ்வொருவருக்கும் ஆன
இந்த உணர்ச்சிக் குவியலில்
பூமி உருண்டு கொண்டே இருக்கிறது….
காதல் இனிது ….
ஆதலால் காதலிப்பீர்… வாழ்த்துகள் காதலர்களே….
add a comment