தமிழகம்

இஸ்ரோவின் நிலவு பயணம் சந்திரயான்-3

61views
சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலவு பயணமாகும். ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு GSLV-LVM3 ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்துகிறது. இதில் சந்திரயான் -2ல் இருந்தது போல ஒரு தரையிறங்கியும் (Lander), தரை ஊர்தியும் (Rover) அமையும். இதில் வட்டவிண்க்கலம் (Orbiter) அமையாது. இதன் செலுத்துகலம் (Propulsion) தொடர்புமுறை இடைவிடு செயற்கைக்கோளாகச் செயல்படும். செலுத்து கலம் தரை இறங்கியையும் தரை ஊர்தியையும் 100 கிமீ தொலைவில் நிலா அண்மைக்குக் கொண்டு சென்று விடும். செலுத்துகலம் தரையிறங்கியோடு சேப்(SHAPE) எனும் ஆய்வுக் கருவியையும் உடன் கொண்டு செல்கிறது. இது நிலா வட்டவிண்கலனில் இருந்து வாழ்தகவு புவியின் கதிர்நிரல்களையும் முனைமைவரைவையும் பதிவு செய்யவல்ல கதிர்நிரல் முனைமையளவியாகும்.
சந்திரயான்-1 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்கு சென்று நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வில் அறிவியலையே புரட்டிப் போடும் நிலவில் தண்ணீர் இருப்பது உள்ளிட்ட நிலவு குறித்த பல தகவல்கள் இஸ்ரோ மூலம் உலகிற்கே தெரியவந்தது. ஜூலை 20,1969 லேயே அமெரிக்காவின் அறிவியல் அறிஞரான விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிலே தரையிறங்கியிருந்தாலும், நிலவில் நீர் இருப்பதை இந்தியாவின் இஸ்ரோ தான் உலகிற்கு முதன் முதலில் கண்டுபிடித்து கூறியது என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வு. இந்த நிகழ்வு உலக நாடுகளின் ஆராய்ச்சியை நிலவு நோக்கி திருப்பியது. இந்நிலையில் இஸ்ரோ அடுத்த திட்டமாக நிலவில் விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டது.
இதன் படி கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 ஏவப்பட்டது. இதில் வட்டவிண்கலன் (Orbiter), தரையிறங்கி (Lander), தரை ஊர்தி (Rover) அடங்கும். செப்டம்பர் 7 2019 அதிகாலை 2 மணிக்கு நாடே தரையிறங்கி நிலவில் இறங்குவதை நேரடியாக தொலைக்காட்சி வழியாக பார்த்துக் கொண்டிருந்தது. திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வட்டவிண்கலன் வெற்றிகரமாக (Orbiter) இயங்கினாலும், வழிகாட்டு மென்பொருளில் சிறு சிக்னல் செயலிழப்பு காரணமாக தரையிறக்கி மெதுவாக திட்டமிட்டபடி தரையிறங்க முடியாமல் போனது. எனவே, சந்திரயான் -2 க்குப் பிறகு மற்றொரு நிலாப்பயணத் திட்டம் முன்மொழியப்பட்டது. தற்போது சந்திரயான்-3 விண்ணில் ஏவ தயாராகியுள்ளது.
சந்திரயான் -3, 2023 ஜூலை 14, மதியம் 2:35 மணிக்கு ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC SHAR லிருந்து GSLV-LVM3 ராக்கெட் ஆல் ஏவப்படும். 100 கிமீ சந்திர சுற்றுப்பாதை வரை உந்துவிசை தொகுதி செலுத்துகலம் (Propulsion), தரையிறங்கி (Lander), தரை ஊர்தி (Rover) கொண்டு செல்லும்.
இந்த ராக்கெட் மொத்தம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் S200 (200டன் எடை) திட நிலை என அழைக்கப்படுகிறது. இது திட வடிவிலான எரிபொருளை கொண்டு இயங்கும் திறன் கொண்டது. இது தான் ராக்கெட் விண்ணில் ஏவ முதலில் செயல்படக்கூடிய இன்ஜின் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்பட்ட 113 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கட்டம் L110 (110டன் எடை) திரவ நிலை செயல்பட துவங்கிவிடும் அதே நேரத்தில் S200 திட நிலை இன்ஜினும் செயல்படும் சரியாக 134-வது நொடியில் S200 திரவ நிலை முழுவதுமாக தனது எரிபொருளை எரித்து முடித்து காலியாகிவிடும். 137 வது நொடியில் இந்த ராக்கெட்டில் இருந்து முதல் கட்ட இன்ஜினான S200 இன்ஜின் பிரிந்து வந்துவிடும். 217வது நொடியில் இது முழுமையாகப் பிரிந்து விடும். அப்பொழுது ராக்கெட்டை முழுவதும் L110 இன்ஜின் தான் செயல்படுத்திக் கொண்டிருக்கும்.
சரியாக ராக்கெட் புறப்பட்டு 313-வது நொடியில் L110 தனது எரிபொருள் அனைத்தையும் தீர்த்து தனது இயக்கத்தை நிறுத்தி விடும். அதே நேரத்தில் கிரையோஜனிக் இன்ஜினான C25 தனது இயக்கத்தை துவக்கி விடும். 313 வது நொடியில் இருந்து 974-வது நொடி வரை இந்த கிரையோஜினிக் இன்ஜின் செயல்பட்டு இந்த சந்திரயான்-3யை ஜிடிஓ எனப்படும் புவி ஒத்திசைவு (Geosynchronous) ஆர்பிட்டிற்கு எடுத்துச் செல்லும். அங்கு இருந்து சந்திரயான்-3 தனது பயணத்தை நிலவை நோக்கி துவங்கும். அங்கிருந்து மெது மெதுவாக நகர்ந்து ஆகஸ்ட் 23-24ம் தேதி சந்திரனில் சந்திரயான்-3 தரையிறங்கும். இதுதான் இஸ்ரோவின் சந்திரயான்-3 விற்கான திட்டமாக இருக்கிறது.
சந்திரயான்-3ன் நோக்காங்களாகப் பின்வருபவற்றைக் கொண்டுள்ளது.
1.தரையிறங்கியைப் பாதுகாப்பாகவும் மெதுவாகவும் நிலாத்தரையில் இறக்கிவிடல்.
2.நிலாவில் தரையூர்தி உலாவும் திறன்களை நோக்கீட்டாலும் செயல்விளக்கத்தாலும் நிறுவுதல்
3.நிலாவின் உட்கூற்றை நன்கு புரிந்து கொள்ளவும் நடைமுறைக்குப் பயன்படுத்தவும் நிலாத்தரையில் கிடைக்கும் வேதி, இயல்தனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செய்முறைகளை மேற்கொண்டு அவற்றின் நோக்கீடுகளைப் பதிவுசெய்தல் .
சந்திரயான்-3, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிறங்கி (Lander), தரை ஊர்தி (Rover) மற்றும் செலுத்துகலம் (Propulsion) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிக்கும் நோக்கத்துடன் உள்ளது. தரையிறங்கி (Lander) ஒரு குறிப்பிட்ட நிலவின் தளத்தில் மென்மையாக தரையிறங்கும் திறனைக் கொண்டிருக்கும், மற்றும் ஊர்தி (Rover) அதன் இயக்கத்தின் போது சந்திர மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே இரசாயன பகுப்பாய்வு செய்யும்.
சந்திரயான்-3 செயற்கைக்கோள் செலுத்துகலம் (Propulsion) 2148 கிலோ, தரையிறங்கி (Lander) 1726 கிலோ, தரை ஊர்தி (Rover) 26 கிலோ என மொத்தம் 3900 கிலோ எடை கொண்டது. செலுத்துகலம் (Propulsion) 758 வாட் மின்சாரமும், தரையிறங்கி (Lander) 738 வாட் மின்சாரமும், தரை ஊர்தி (Rover) 50 வாட் மின்சாரமும் என மொத்தம் 1546 வாட் மின்சாரமும் சூரிய தகடுகளின் மூலம் கிடைக்கும்.
சந்திரயான்-3 என்பது இந்தியாவின் கனவு திட்டமாக இருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் சந்திரனை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா சந்திரனின் தரை இறங்குவது விண்வெளி ஆய்வில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா எவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதற்கு சான்றாக அமையும்.
தகவல் : இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர்,
நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!