தமிழகம்

ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு! வழிநெடுகிலும் கிராம மக்கள், தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு

40views
புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் இன்று (ஏப்ரல் 1) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.

பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.
ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
டில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர். இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன பெண்மணி திருமதி, விஜயா கூறுகையில், ‘எங்களுடைய கிராம மக்கள் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சத்குரு தான் காரணம். அவரால் தான் எங்களுடைய பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. அவர் கற்றுக்கொடுத்த யோகா மூலம் பல இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளி வந்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அந்த ஆபத்தில் இருந்து சத்குரு மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கூடிய விரைவில் முழு நலன் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை’ என்றார்.
இந்த தருணத்தில் அனைவரிடம் இருந்தும் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் ஈஷா அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!