தமிழகம்

தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் ஆணிவேர் ஸ்ரீரங்கம் – எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பெருமிதம்

59views
தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் ஆணிவேர் ஸ்ரீரங்கம் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் *ஸ்ரீரங்க மகாத்மியம்* எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது ஸ்ரீரங்கம் என்பது 108 திவ்ய தலங்களில் முதலாவது தலமாகும். இதை பூலோக வைகுண்டம் என்றும் கூறுவர். இந்த தலம் உருவானவிதமே சிலிர்ப்பூட்டக்கூடிய ஒன்றாகும்.
வைகுண்டத்தில் அந்த மகாவிஷ்ணு முதலில் படைத்தது பிரம்மாவை தான்.அந்த பிரம்மாவிடம் நான்கு வேதங்களையும் தந்து, பின் உலகையும், உயிர்களையும் படைக்கச் செய்தார். அதோடு தன்னை படைத்த மஹாவிஷ்ணுவின் பிரணவாகார சொரூபத்தை ஒரு சிலை வடிவில் செய்து அதை பூஜிக்கவும் செய்தார்.  பிரம்மா தனது சத்ய லோகத்தில் பூஜித்த அந்த பிரணவாகார விமானமுடன் கூடிய சிலைதான் இன்றும் ஸ்ரீரங்கத்தில் நம் வழிபாட்டில் உள்ளது.
இந்த சிலையை சூர்ய வம்சத்தில் வந்த மனுவின் புதல்வனான இட்சவாகு என்பவன் கடும்தவம் புரிந்து பூமிக்கு கொண்டுவந்து, அயோத்தியில் சரயூ நதிக்கரையில் வைத்து பூஜித்து வந்தான்.பின் அந்த வம்சத்தில் ஸ்ரீராமபிரான் அவதாரம் செய்தார். ஸ்ரீராமனும் இந்த மூர்த்தியை வழிபட்டார். பின்னர் இதை தான் விபீஷணன் வசம் ஒப்படைத்து இலங்கைக்கு கொண்டுசெல்லப் பணித்தார். ஆனால் இதை இலங்கை செல்லும்வரை இருநாழிகைக்கு மேல் கீழே எங்கும் வைத்துவிடக்கூடாது என்கிற நிபந்தனையுடன்தான் விபீஷணனிடம் தருகிறான் ராமன். இருந்தும் காவிரித்தீவை கடக்கும் சமயம் அங்கு தங்கி காவிரியில் விபீஷணன் நீராடுகிறான்.அது இருநாழிகைக்கு மேல் சென்று விட்ட நிலையில் அந்த பிரணவாகார விமானமுடன் கூடிய சிலை அந்த தீவில் கோவில் கொள்கிறது. அதன் பிறகே காவிரித்தீவும் , திருவரங்கம் என்றானது. இந்த திருவரங்கம் பிற்காலத்தில் சோழ அரசர்களால் பெருங்கோயிலாக உருமாறியது.
இந்த தலத்தில் இருந்து கொண்டுதான் ஸ்ரீராமானுஜர்., ஸ்ரீவேதாந்த தேசிகள்., ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோர் வைணவத்தை வளர்த்தனர். இவர்களால் தமிழ்மறை எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தமும் இங்கே இறைவன் முன்னால் பாராயணம் செய்யப்பட்டு, அந்த வழக்கம் இப்போதும் தொடர்ந்து கொண்டுவருகிறது. திருவரங்கம் தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் ஆணிவேராய் திகழும் தலமாகும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார்கள் சொன்னது போல நாம் வாழ்கிற காலத்திலேயே இறை சிந்தனையோடு இருக்க வேண்டும்.
இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!