தமிழகம்

இன்றைய இளைய தலைமுறையினரின் கவிதைகள் : புதிய நம்பிக்கையை விதைக்கின்றன கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் நம்பிக்கை

47views
சென்னை.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியில்  கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 29) கவிஞர் சீ.பாஸ்கர் எழுதிய ‘விழியின் ஓசை’ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் பா.யாழினி வரவேற்றார். விழாவிற்கு தலைமையேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் அருள்பிரகாஷ் கவிதை நூலை வெளியிட, பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
விழாவில், உரத்த சிந்தனை ஆசிரியர் உதயம்ராம், பேராசிரியர் ஆதிரா முல்லை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, “மகாகவி பாரதியாரால் முன்னெடுக்கப்பட்ட புதுக்கவிதை இன்றக்குப் புதிய பல எல்லைகளைத் தொட்டுள்ளது. நாம் வாழும் சமூகத்தில் நிகழும் சகலத்தையும் புதுக்கவிதை படம்பிடித்துக் காட்டுகிறது. சமுதாயத்தில் நிலவும் சாதி-மத ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இன்றைய இளைய தலைமுறை கவிஞர்கள் எழுதும் கவிதைகள் மிகுந்த நம்பிக்கையளிப்பதாக உள்ளன.
இளையவர்களின் பிரதிநிதியாக இருந்து கவிஞர் சீ.பாஸ்கர் எழுதியுள்ள இந்தக் கவிதை நூலிலுள்ள பல கவிதைகள் வாசக மனதில் நல்ல சிந்தனைகளையும், உயரிய எண்ணங்களையும் உண்டாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. தந்தை, தாய், தங்கை மற்றும் உறவுகளுக்கிடையேயான பாசப்பிணைப்பை கவிஞர் எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கது. இறந்த அப்பாவைப் பற்றிய கவிதைகளை வாசிக்கும்போது, வாசிப்பவர்களுக்கு அவரவர் அப்பாக்களின் நினைவுகள் வந்துவிடுவது நிச்சயம்.
தமிழ்க் கவிதை இன்னும் பல புதிய உயரங்களைத் தொடும் எனபதற்கான சாட்சியமாக இந்தக் கவிதை நூல் வெளிவந்துள்ளது” என்று குறிப்பிட்டார். நிறைவாக, நூலாசிரியர் கவிஞர் சீ.பாஸ்கர் ஏற்புரையாற்ற, நூல் வெளியீட்டு நிகழ்வை பா.ஆதவன் தொகுத்து வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!