220views
குழந்தையாய் இருக்கும் போது ஒருவர் ஏதாவது செய்தால் அதையே நாமும் செய்ய முயற்சி செய்வோம்.சிலர் பலூன் கூட எளிதில் ஊதி கட்டி விடுவார்கள்.அதையே நாம் முயற்சிக்கும் போது சிரிப்பு தான் வரும். பலூனில் காற்றும் நிரம்பாது. சிலசமயம் ரொம்ப பெருசா ஊதுகிறேன் என்று வெடித்து முகத்தை வெளிறச்செய்யும். பயத்தை வெளியே காட்டாமல் அசடு வழிந்து அங்கிருந்து நகர்ந்ததும் உண்டு.
ஊரிலிருந்து மாமா பெரியப்பா இவர்கள் எல்லோரும் வரும் போது ஓடி ஒளிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.அவர்கள் என்ன வாங்கி வந்துள்ளார்கள் என்று ஆர்வமும் இருக்கும்.படிப்பு பற்றி கேட்டால் நைசாக நகர்ந்து சென்று அம்மாவுக்கு உதவி செய்யறமாதிரி,வேறு வேலை ஏதாவது செய்ய செல்வது இன்று நினைத்தால் நகைச்சுவை தான்.
தேரோட்ட திருவிழா நடக்கும் போது வரும் உறவினர்கள் ஸ்பெஷல்.ஏனென்றால் தேர் காசு கிடைக்கும்.அதில் நாமே சென்று பொருட்கள் வாங்கிக் கொள்வது மகிழ்ச்சி தரும்.சில விளையாட்டு பொருட்கள் தலை வேதனையான சத்தங்கள் தரும்.அதுதான் மிகவும் பிடிக்கும் .அதை வாங்கி மற்றவர்கள் முகத்துக்கு அருகில் சத்தம் செய்வது தனி சுகம் தான்.
தீபாவளி நேரத்தில் பட்டாசு சேகரிப்பது. பத்து பைசா கிடைக்கும் அதை பட்டாசு கடையில் உள்ள ஒரு கேப் டப்பா வாங்குவோம். அதில் என்ன பரிசு வருதோ அந்த வெடி கிடைக்கும். நிறைய பாம்பு மாத்திரை டப்பா தான் பரிசாக கிடைக்கும். வெடி பரிசு வந்தாலும் சின்ன சரவெடி, 2 லட்சுமி வெடி, ஒரு புஷ்வானம், ஒரு சக்கரம், சின்ன பூத்திரி, கலர் மேட்ச் பாக்ஸ் டப்பா1 இதெல்லாம் தான் வைத்திருப்பார்கள். பத்துநாள் முன் கூட்டியே சேர்க்க ஆரம்பித்து விடுவோம்.
வெங்காய வெடிக்கல்லாம் அதிர்ந்து ஓடிய காலங்கள் உண்டு. இதில் ஒரே மாதிரி வெடிகள் கிடைக்கும் போது மற்றவர்களுடன் மாற்றிக் கொண்டு எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கற மாதிரி சேகரித்து வைப்போம். வெடிக்காத வெடியெல்லாம் எடுத்து வெடிக்க வைப்பது ஒரு தனி கலை. ஒரே ஒரு ராக்கெட் வாங்கி அதை பக்குவமாக வைத்தும் நம்ம கிட்ட சிலசமயம் வழி தவறி வரும் சிரிப்பு தான்.வெடிக்கலையே என்று கிட்டே சென்று பார்க்கும் போது புஸ்ஸுனு பயமுறுத்தும் வெடிகளும் உண்டு.
வடம் வத்தல் அனுபவம் இதுதான் மிகவும் ஜோரான விடுமுறை உல்லாச உலா.. காலையில் பள்ளி நாட்களில் எழுந்துருக்கமாட்டோம். வடம் என்றால் காலையே எழுந்து அம்மா பாட்டி அருகில் அமர்ந்து கூழ் எப்ப ரெடியாகும் என்று டேஸ்ட் பட்ஸ் தவிக்கும். முதல் உப்பு சேர்ப்பதிலிருந்து டேட்டிங்,அதை பிழியும் போது நடுநடுவே ஒரு கோலிக்குண்டு உருண்டை மாதிரி உள்ளே செல்லும்.
பிழிந்து முடிந்ததும் காய்ச்சலுக்கு துணை என்று அப்பப்ப எடுத்து அமுக்கிட்டு எடுத்தது தெரியாதது மாதிரி வைப்பது…இதில் அப்பள அலப்பறையும் சேரும். அதன் வாசனையே சொர்க்கம். அம்மியில் வைத்து உலக்கையால் இடிக்க ஆளுக்கு ஒரு ரவுண்ட் என்று 4 பேர் போட்டி போட்டு இடித்து தருவோம். அதை உருட்டி சில்லு போடறோம் என்று அது வடிவம் சரியா வரவில்லை என்று வாய்க்குள் போகும். இந்த அனுபவங்கள் விலை கொடுத்தாலும் கிடைக்காது.
புவனா முத்து , மும்பை.
add a comment






