கட்டுரை

கொத்தடிமைகளை மீட்டு வரும் புரட்சி பெண்!

45views
முனைவர் என்.பத்ரி
நம் சமுதாயத்தில். இன்றளவும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பலர் வறுமையின் காரணமாக அடிமைத்தனத்திற்கு உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். இப்படியான மிகவும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நம்பிக்கை விளக்காக விளங்குகிறார் வீ.அலமேலு.
தமிழகத்தில் கொத்தடிமை முறை நீண்டகாலமாக ஒரு சமூகப் பிரச்சனையாக இருந்து வருகிறது. கடன் சுமை காரணமாக ஒரு நபரோ அல்லது மொத்த குடும்பமோ குறைந்த ஊதியத்திற்கு அல்லது ஊதியமே இல்லாமல் பல தலைமுறைகளாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இதற்கான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.அதேபோல, தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் சேலம் மாவட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீ.அலமேலு என்பவர் இதுவரையிலும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டெடுத்துள்ளார். மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இவரும் ஒரு கொத்தடிமையாக இருந்தவர் தான். இவருடைய குடும்பமும் 30 ஆண்டு காலத்திற்கு மேலாக கொத்தடிமைகளாக இருந்து அதில் இருந்து மீண்டு வந்துள்ளது.
பின்னர் தம்மைப் போல் கொத்தடிமைகளாக இருந்து வாழ்ந்து வருபவர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்று எண்ணி கொத்தடிமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிக்கலில் தவிப்பவர்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து வருகிறார்.
இவ்வகையில் இதுவரையிலும் தமிழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 9000 க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டெடுத்துள்ளார். இவருடைய சமூக சேவை அனைவராலும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!