கட்டுரை

அறியப்பட வேண்டிய ஆளுமைகள்

442views
“பெரு மரமொன்று கிளைகள் பரத்தி கொத்துக்கொத்தாக கருநீல கனிகளைப் பறிக்க பறிக்க கை நிறைய தந்து கொண்டே இருக்கிறது, தீரவே இல்லை”….
அதுபோல இயல்வாகை பதிப்பகத்தின் வெளியீடுகளும், சுட்டி யானை சிறுவர் இதழின் தொடர் செயல்பாடுகளும் இயற்கை மீதும் சுற்றுச்சூழலின் மீதும் அவர்களின் பேரன்பை நமக்கு பறைசாற்றுகின்றன.

இயற்கையின் பக்கம் மனிதனைக் கொண்டு செல்வதே இயல்வாகையின் பிரதான நோக்கம்.
பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்! பாயும் மீனில் படகினை கண்டான்! இயற்கையிலிருந்தே மனிதன் கற்றுக் கொள்கிறான். ஆதி மனிதன் காலம் தொட்டு கண்டறியப்படும் ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் அடிப்படை இயற்கையை. இயற்கையின் தொழில்நுட்பத்தை நாம் கண்டுணரத் தவறியதே பல விஷயங்கள் நம்மிடமிருந்து மறைந்ததற்கு காரணம்.

நம் பாரம்பரியத்தை மீட்டு நம் குழந்தைகளிடம் சேர்ப்பதை முழுமூச்சாக கையில் எடுத்து இருக்கிறது சுட்டி யானை சிறுவர் இதழ். பல ஊர்களில் உள்ள இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து சிறுவர்களுக்காக பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.

அறிவியல் வளர்ச்சியையும், மரபு சார்ந்த நல்ல பழக்க வழக்கங்களையும் ஒருசேர எடுத்துக் கொண்டு பயணிக்கிற சமூகமாக நம் குழந்தைகள் மாற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு களிமண் பொம்மைகள் பயில் முகாம், பனையோலை பொருட்கள் செய்முறை, தேங்காய் சிரட்டை பொம்மைகள், நூல் அறிமுகம், இயற்கை வார சந்தைகள், சினிமா கொட்டாய், நாடக கொட்டாய், இயற்கை வண்ணங்கள் தயாரித்தல், “சொல்வதற்கு கதைகளே இல்லை என்றால் எப்படி வாழ்ந்தாயோ”… என்ற தஸ்தாயேவெஸ்கியின் வார்த்தைகளில் இணங்கி, கதை சொல்லல் நிகழ்வுகள் போன்ற தொடர் செயல்பாடுகளை நடத்திவரும் இயல்வாகைக்கும், சுட்டி யானை சிறுவர் இதழுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

நற்செயல்கள் செய்பவரின் பெருமையும் சிறப்பும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவர்களது அருமை தொடக்கத்தில் தெரியாவிட்டாலும் நாளடைவில் மிகவும் சிறப்பாக நன்றாகவே உணரப்படும். இயல்பாகை பதிப்பகத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்களும், செயல்பாடுகளும் மனிதர்களிடம் வரும் நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன.
அவர்களின் நூல்களில் சிலவற்றை இங்கு காண்போம்.
தீ கார்த்திக் எழுதிய தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல், கோ. நம்மாழ்வார் எழுத்தில் “பூமித்தாயே” “விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்”, “ஏன் வேண்டும் இயற்கை உளவான்மை”, “வயிற்றுக்குச் சோறிட வேண்டும்”, “மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்” போன்ற சூழல் சார்ந்த எண்ணற்ற நூல்களை வெளியிட்டுள்ளது இயல்பாகை பதிப்பகம்.

மரபில் இருந்து எடுத்துக் கொள்ள ஆயிரம் இருக்கின்றன.அந்த மரபை கதை வழி சொல்லித் தரும் சிறுவர் இதழே சுட்டியானை பெயருக்கேற்றார் போல் யானைகளைப் பற்றியும் சுற்றுச்சூழலில் காடுகளின் பங்களிப்பை பற்றியும் சொல்லித் தருகிறது சுட்டி யானை.

சுட்டியானை சிறுவர் இதழில் கதைகள், பாடல்கள், புதிர்கள், வண்ணம் தீட்டுதல், கைவினைப் பொருள்களின் செயல்முறை,என்று அசத்தலாக நம் குழந்தைகளின் கைகளில் தவழ்கிறது சுட்டி யானை.

மேலும் 40 வகையான நாட்டு காய்களின் விதைகளை சேகரித்து விதை பரவலாக்கம் செய்வதோடு வருங்கால குழந்தைகளின் மனதிலும் இயற்கையின் மீது பெரும் காதலை விதைத்துள்ளது.
நாம் இயற்கைக்கு விரோதமான காலத்தில் வாழ்கிறோம். மறுபடியும் இதை நாம் இயற்கையானதாக்க வேண்டும் என்றால் நாம் மண்ணோடு அன்பை விதைத்தெடுக்கும் வாழ்வியலை நோக்கி பயணப்பட வேண்டும்.

இயற்கையின் வாழ்வியலை நோக்கி தொடர்ந்து செயல்பட்டு வரும் திரு அசோக் குமார் அவர்களுக்கும், இயல்வாகை திருமதி.அழகேஸ்வரி அசோக் குமார் அவர்களுக்கும் , குழு உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்அனைவருக்கும் நன்றிகள் பல.
மு.ஜுபைதா முனவர்,
கதை சொல்லி.

1 Comment

  1. வாசிக்க வேண்டிய சிறார் இதழ் சுட்டி யானை

    வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இயல்வாகை வெளியீடுகள்

    பாராட்ட வேண்டிய ஆளுமை தோழர் அசோக் & குழுவினர்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!