199views
ஏ. வி. எம் சரவணன் என்றழைக்கப்பட்ட மெய்யப்பன் சரவணன் ஒரு புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தன் தந்தையான ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் உருவாக்கிய ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன் பள்ளி இறுதி வகுப்புவரை படித்துள்ளார்.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுச் சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர ஷெரீப் ஆகிய பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது,புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.தென்னிந்திய சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது (தமிழ் – நானும் ஒரு பெண்- 1963),சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது(தமிழ்- சம்சாரம் அது மின்சாரம் -1986) ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.தமிழ்த் திரைப்படத்துறையில் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏவிஎம் நிறுவனமும் ஆகும்.
சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, அயன், வேட்டைக்காரன், லீடர், திருப்பதி, ஜெமினி, எஜமான், மின்சார கனவு, ராஜா சின்ன ரோஜா, மனிதன் போன்ற ஏராளமான சிறந்த திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந் நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏவிஎம் நிறுவனம் மேலும் வளர்ச்சியைக் கண்டது. சிவாஜி படத்தை மிகப்பெரிய முதலீட்டில் தயாரித்த இவர், தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு கொண்டு சென்றவர் ஆவார்.பார்ப்பதற்கு எப்போதும் வெள்ளை உடையில் இவர் காணப்படுபவர். நெற்றியில் குங்குமம், கனிவான பேச்சு ஆகியவையே ஏவிஎம் சரவணின் அடையாளங்கள் ஆகும்.
எப்போது யாருடன் பேசினாலும் கைகளை கட்டிக் கொண்டு தன்னடக்கத்துடன் அமைதியாக உரையாடும் பழக்கத்தைக் கொண்டவர் இவர். இதன் காரணமாகவே ஏவிஎம் நிறுவனம் மீது நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஏவிஎம் நிறுவனப் படங்கள் பொதுமக்களை திரையரங்கிற்கு வெகுவாக ஈர்க்கும் வகையில் இருந்தன.அதேபோல் தமிழ் சினிமாவில் குடும்ப படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவரும் இவரே ஆவார். 2014ஆம் ஆண்டுக்கு பின் ஏவிஎம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் சரவணன் உடல்நிலை குறைவு ஏற்பட்டு இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும்வந்தார். இந்நிலையில் இன்று காலை (04.12.2025) 5.30 மணியளவில் அவர் காலமானாதாகக் கூறப்படுகிறது. இவரின் மறைவு, தமிழ் சினிமா நடிகர்கள், ரசிகர்கள் என்று அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முனைவர் என்.பத்ரி
add a comment





