கட்டுரை

நூல் அறிமுகம் – பதினெண் கதைகள்

220views
நூலின் பெயர் : பதினெண் கதைகள்
நூல் ஆசிரியர் : ஹரிவர்ஷ்னி ராஜேஷ் ( 8 வயது)
ஓவியர் : வர்த்தினி ராஜேஷ் ( 14 வயது )
வெளியீடு : விஜயா பதிப்பகம்
கோவையில் வசிக்கும் ஹரிவர்ஷ்னி ராஜேஷ், தனது எட்டு வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பே பதினெண் கதைகள் என்ற சிறுகதை நூல். பதினெட்டு சிறுகதைகள் கொண்ட இந்நூல் வாசிக்கும் போதே சிறுமியின் மொழி வளம் வியப்படையச் செய்கிறது.
கற்பனையை ஓவியத்திலும் வெளிப்படுத்தலாம் என்பதை வர்த்தினி ராஜேஷ் நிருபித்துள்ளார். தன் தங்கையின் கதைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஓவியம் வரைந்து அழகு படுத்தியுள்ளார் வர்த்தினி ராஜேஷ்.
இந்த வயதில் இப்படி ஒரு கற்பனைத் திறனா? என்று வியக்கும் வகையில் ஓவ்வொரு கதையும் உள்ளது. டைனோசர் தேவதையாக மாறி மற்றவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சியாக நினைக்க வேண்டும் என்பதை டைனோசரும் தேவதையும் என்ற கதையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மகிழுந்து, மெது உருளி போன்ற புது வார்த்தைகள் பயன்படுத்தி இருப்பதில் அவரின் மொழித் திறன் தெரிகிறது.
அதிவேகத்தில் வாகனம் இயக்கக் கூடாது, பகிர்ந்து உண்ண வேண்டும், உயிர்களை நமது சுயநலத்திற்காக துன்புறுத்தக் கூடாது , தவறு செய்தவர்களையும் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்களை பார்கும்போதே தெரிகிறது குழந்தையின் மனம்.
அன்பு ஆசிரியரின் அரவனைப்பு என்ற கதையில் மாணவியாக நின்று ஆசிரியர்கள் எப்படி வேண்டும் என்பதை நமக்கு கூறுவதாக உள்ளது. குறையை கண்டு பிடிக்கும் ஆசிரியர் வேண்டாம் திறமையை கண்டு பிடிக்கும் அன்பு ஆசிரியர் வேண்டும் என்பதை கதை மூலம் கூறுகிறார் நம் சுட்டி எழுத்தாளர்.
வெண்பாவின் பாசம் என்ற கதையில் சிறுமிக்கு மரத்துடன் ஆன உனர்வை மிக நேர்த்தியாக வெளிபடுத்தி இருக்கிறார்.
வித்தியாசமான தலைப்புகளை பார்க்கும் போதே வாசிக்கத் தூண்டும் அளவிற்கு எழுதியுள்ளார். வடிவமைப்பும் அட்டைப் படமும் குழந்தைகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
கதைகள், ஓவியங்களைத் தாண்டி தான் ஓரு சிறந்த கதை சொல்லி என்பதை QR code வடிவில் நமக்கு கதையும் கூறி உள்ளார்.
கற்பனையின் சிறகுகளை விரித்து எழுதத் துவங்கியுள்ள இளம் எழுத்தாளரையும், ஓவியரையும் புதிய படைப்புகள் பல படைக்க வாழ்துக்கள்…
சரண்யா சண்முகம்

ஈரோடு.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!