தமிழகம்

இந்தியாவின் பதிப்பக தலைநகராக சென்னை உயர்ந்துள்ளது!! துணை முதல்வர் பெருமிதம்!!

251views
முனைவர் என்.பத்ரி
சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில், 2026-ம் ஆண்டுக்கான பபாசி விருதுகளை வழங்கி துணை முதல்வர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன். அன்பில் மகேஸ், மற்றும் பபாசி தலைவர் சண்முகம், செயலாளர் வயிரவன், பொருளாளர் வெங்கடாசலம். துணைத்தலைவர் நக்கீரன் கோபால் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். விழாவில் இந்தியாவின் பதிப்பக தலைநகராக சென்னை உயர்ந்துள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், 49-வது சென்னை புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பபாசி விருதுகள் வழங்கும் விழா, புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது – ஐந்திணை பதிப்பகம், சிறந்த நூலகருக்கான பூங்கொடி வே.சுப்பையா விருது – எஸ்.வனஜா (அண்ணா நூற்றாண்டு நூலகம்), சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது – மு.முருகேஷ், சிறந்த எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது – ஜா.தீபா, சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது – அ.லோகமா தேவி, முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது – செ.பா. சிவராசன், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது – முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
விழாவில் துணை முதல்வர் பேசும் போது கடந்த 1977-ம் ஆண்டு வெறும் 13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட சென்னை புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாடவுள்ளது என்றும், இந்த ஆண்டு புத்தகக் காட்சி அரங்குகளை பார்வையிட வாசகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாகவும்,இதற்காக வாசகர்கள் சார்பில் பபாசிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், துணை முதல்வர் உட்பட எத்தனையோ பொறுப்புகளில் இருந்தாலும் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் இந்த புத்தகக்காட்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் விடுமுறை நாட்களில் திரையரங்கு, பெரும் வணிக வளாகங்களில்தான் பொதுமக்கள் அதிகம் கூடுவர். ஆனால், அண்மைக்காலமாக சென்னையில் புத்தகக் காட்சி தொடங்கி விட்டால் மக்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக வருவதை பார்க்க முடிகிறது. ஒருபுறம் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் பன்னாட்டு புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது. இவ்வாறாக சென்னை இந்தியாவின் பதிப்பகத் தலைநகராக (பப்ளிஷிங் கேப்பிடல்) உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!