நாடாளுமன்ற மழைக்காலக் கூட்ட தொடர் தொடங்கி 2 வாரம் நிறைவடைந்துள்ளது. ஆனால் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 அவைகளிலும் பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் தினசரி அவை நடப்பு குறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:
மாநிலங்களவையில் இந்த 2 வார காலத்தில் 80 சதவீத வேலை நேரம் வீணாகியுள்ளது. முதல் வாரத்தில் இருந்த மொத்த வேலை நேரத்தில் 32.2% மட்டுமே மாநிலங்களவை இயங்கியுள்ளது. 2 வாரங்களையும் சேர்த்தால் 21.6% மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டுள்ளது.
அதில், 130 பூஜ்ய நேரமும் 87 சிறப்பு குறிப்பு நேரமும் நடத்த முடியாமல் அவை முடங்கியது. மொத்தமுள்ள 50 மணி வேலை நேரத்தில், 39.52 மணி நேரம் அமளியால் முடங்கியிருக்கிறது. அதாவது சுமார் 80 சதவீத வேலை நேரம் வீணாகியுள்ளது.
அதேநேரத்தில் திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் 1.12 மணி நேரம் மாநிலங்களவை அதிகமாக செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை மொத்தமாக 9 முறை கூட்டப்பட்டுள்ளது. அதில், 1.38 மணி நேரத்தில் மட்டும் கேள்வி நேரம் நடத்தப்பட்டுள்ளது.
கடற்பயண வழிகாட்டு உபகரணங்கள் மசோதா 2021, சிறார் நீதி திருத்த மசோதா 2021, காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2021, தென்னை வளர்ச்சி வாரியம் திருத்த மசோதா 2021 ஆகிய 4 மசோதாக்களை நிறைவேற்ற 1.24 மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது.
கேள்வி நேரம், சிறப்பு குறிப்பு நேரம் ஆகியவற்றில் மக்களின் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பர். ஆனால் கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளி செய்வதால்அவை அடிக்கடி ஒத்திவைக்கப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.