கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேசபயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப்போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச்23ம் தேதியிலிருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டுவரவும், உள்நாட்டில் சிக்கிய வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே மாதத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனாலும் தொடர்ந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை இன்று ஜூலை 31 உடன் முடிவடைய உள்ள நிலையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருப்பதால் வரும் ஆகஸ்ட் 31 வரைநீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
அதேசமயம் தேவையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைஅனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டிஜிசிஏ கூறியுள்ளது.
மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள தடையானது சர்வதேசசரக்கு விமானப் போக்குவரத் துக்கும் டிஜிசிஏ அனுமதி அளித்துள்ள சிறப்பு விமானங்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.