நடிகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் கவிஞர் சினேகன். தமிழ் திரையுலகில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அதில் பல்வேறு பாடல்கள் தமிழக மக்களின் டாப் ப்ளே லிஸ்டில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.
அத்தோடு உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சினேகன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இதையடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன், நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், கவிஞர் சினேகன் வரும் 29-ம் தேதியன்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார்.
இது தொடர்பாக சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்தத் திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ்நிலையில் காலம் நம்மை நகர்த்திச் செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.
இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது.
எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
இவ்வ்வாறு அவர் கூறியிருக்கிறார்.