செய்திகள்தமிழகம்

மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் பரிந்துரை

63views

சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடுவதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதைச் சுற்றியுள்ள பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை குடிநீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரப் பகுதியில் லாரிகள் கழிவுநீர் விடுவதைத் தடுக்க, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 3 கோட்டாட்சியர்களும், போலீஸாருடன் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தற்போது 34 கழிவுநீர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. குடிநீர் வாரியத்துக்கு 044 4567 4567 என்ற எண்ணை அழைத்து, நியாயமான கட்டணத்துடன் கூடிய இந்த சேவையை பலரும் பெற்று வருகின்றனர்.

குடிநீர் வாரியம் சார்பில் 6 ஆயிரம், 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் வசதியுடைய 50 கழிவுநீர் லாரிகள் வாங்கப்பட உள்ளன. இந்த நிதியாண்டிலேயே இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும். வாரியம் சார்பில், சென்னை மாநகராட்சி எல்லையில் தனியார் கழிவுநீர் லாரிகள் பதிவு, இயக்கத்தை ஒழுங்குபடுத்த, வரைவு செயலாக்க நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதை செயல்படுத்த உரிய அனுமதி பெற அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த செயலாக்க நெறிமுறையில், பதிவு செய்யப்பட்ட லாரிகளில் ஜபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் கழிவுநீர் உறிஞ்சுதல், வெளியேற்றம் ஆகியவை கண்காணிக்கப்படும். இதன்மூலம் விதிகளை மீறி மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவதை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், விதிகளை மீறி கழிவுநீர் விடப்படுகிறதா என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்காணிக்க பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்த வேண்டும். போலீஸார் உதவியுடன் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை உடனடியாக வட்டார போக்குவரத்து அதிகாரி ரத்து செய்ய வேண்டும். வாகன தகுதிச் சான்றை புதுப்பிக்கும்போது உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லா சான்றைக் கட்டாயம் கேட்க அறிவுறுத்த வேண்டும். போலீஸாரும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!