கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருத்து
கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என,கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிடவில்லை. இதுபற்றி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும், முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது. வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும், மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் அரசு ஈடுபட வேண்டும்.
சட்டப்பேரவையில் எங்களின் கருத்துகளை சொல்வதற்கும் இடம் வேண்டும்.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களைத்தான் தமிழக அரசு குழுவில் நியமித்துக் கொள்ளும் என்றால், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துதான் செயல்பட வேண்டும். இணைந்துசெயல்பட்டால்தான் தமிழகத்துக்கு நல்லது” என்றார்.
கிஷோர் சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. பிரதமரை பற்றி திமுக முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர். பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் அந்தப் பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும்”என்றார்.