160
வேட்டிநுனி பிடித்துநீ
நடந்துவரும் தோரணையில்
அசந்துபோய் ரசித்திடுவர்
உன்னழகை சபைதனிலே
புன்சிரிப்பை தவழவிட்டு
குங்குமத்தில் பொட்டுவைத்து
பாட்டெழுத நீயமர்ந்தால்
மெட்டுகளின் மொட்டவிழும்
இன்னிசை ஒலிகளுக்காய்
பண்ணெடுத்து பாட்டமைத்தாய்
உன்வாழ்வின் அனுபவங்கள்
ஆங்காங்கே நீதெளித்தாய்
நாட்டுக்கோட்டை வம்சத்தில்
உதித்துவந்த தாமரையே
மேடைகளில் ஏறிநின்றால்
உனக்கென்றும் பூமழையே
அறிஞனவன் உரைகேட்டு
நாத்திகனாய் இருந்துவந்தாய்
காஞ்சிபுரக் கருணையினால்
ஆத்திகனாய் மாறிநின்றாய்
மதுமாது நீக்கிவிட்டால்
உன்குறை ஒன்றுமில்லை
வாழ்ந்திருந்த நாள்வரையில்
வன்முறை ஏதுமில்லை
தற்பெருமை ஏதுமின்றி
தமிழுலகை ஆண்டவனே
தலைக்கணம் துளியுமின்றி
தரணியிலே வாழ்ந்தவனே
தமிழன்னையை தினம்வணங்கி
உனக்கான புகழ்சேர்த்தாய்
உயிர்வாழ்ந்த நாள்வரையில்
தன்மானம் தனைக்காத்தாய்
இலக்கியமும் கவிதைகளும்
ஆயிரமாய் நீதொடுத்தாய்
தமிழன்னை பாதங்களில்
தாராளமாய் தவழவிட்டாய்
எள்ளிநகையாடிய மனிதர்களின்
போக்கினையும் பாடல்களில்
பிரபலிக்கும் பக்குவமறிந்த
தமிழ்க்குலத்தின் செல்வபுத்திரன்
மாற்றான்தோட்டத்து மல்லிகையும்
மணக்குமென அறிந்ததனால்
பிறகவிஞர் பாடலையும்
பாராட்டியே பரிசளித்தாய்
இந்துமத அர்த்தங்களை
ஏட்டினிலே எழுதிவைத்தாய்
மதபேதம் ஏதுமின்றி
ஏசுகாவியம் நீபடைத்தாய்
உன்னுருவில் இன்னொருவர்
இதுவரையில் பிறக்கவில்லை
உன்னிடத்தை இனிமேலும்
நிரப்பிடவே கவிஞரில்லை
உனையிழந்தே கலைமகளும்
தவிக்கின்றாள் தனிமையிலே
பிறந்துமீண்டும் வருவாயா
கவியரசே புவிதனிலே
-
ரமணிராஜன்
add a comment