யூ டியூபர் பப்ஜி மதனிடம் ஏமாந்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர்.
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன் குமார் என்ற மதன். சேலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வேங்கைவாசலில் வசித்து வந்தார். பின்னர் சென்னையில் குடியேறினார். இவர், தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு விளையாடும் போது அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளையாடிக்கொண்டே ஆலோசனை வழங்கி வந்தார்.
மேலும் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பினரையும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வந்தார். மேலும் பெண்களின் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களை குறிப்பிடும் வகையிலும் பேசி வந்துள்ளார். அதை தான் நடத்தி வரும் இரு யூடியூப் தளங்களில் வீடியோக்களாக வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார்.
மதனின் எல்லை மீறிய செயல்பாடு குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் ஜாமீன்கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது ஒருபுறம் இருக்க மதனின் யூ டியூப் சேனல்களை நிர்வகித்து வந்த மதனின் மனைவி கிருத்திகாவை சேலம் சென்று சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த மதனும் தருமபுரியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். பின்னர், சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதனின் சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீஸார் அவரின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அவரது யூ டியூப் சேனலையும் சைபர் கிரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, பப்ஜி மதன் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி, ஏமாற்றப்பட்டதாக மதன் மீது (dcpccb1@gmail.com) 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் வாயிலாக புகார்கள் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.