தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு படக்குழு சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தியா வரவுள்ள அவர் கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’, ராட்ச்சன் பட இயக்குநர் ராம் குமார் இயக்கும் படம், சகோதரர் செல்வராகவன் இயக்கும் இரண்டு படங்கள் என பல்வேறு கமிட்மெண்டுகளை வைத்துள்ளார்.
இந்த வரிசையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமும் அடங்கும். இந்நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம், பிரபல இயக்குநர் சேகர் கம்மூலா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் நேரடியாக கால்பதிக்கிறார் தனுஷ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சேகர் கம்மூலா இயக்கத்தில் ஃபிதா, லவ் ஸ்டோரி என இரண்டு படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி. அதில் லவ் ஸ்டோரி படம் விரைவில் வெளிவரவுள்ளது.
ஒருவேளை சாய் பல்லவி இப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், மாரி- 2 படத்தை தொடர்ந்து தனுஷுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.