தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த மாதம் 10ம் தேதி பேருந்து சேவை, ரயில் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டது. பாதிப்பு படிப்படியாக குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும், பேருந்து சேவைக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. சுய தொழில் செய்வோர், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட தொடங்கிவிட்டதால் பேருந்துகள் இயங்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வெகுவாக எழுந்தது.
இதையடுத்து, பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நிபுணர்கள் குழு மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில், பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாமென நிபுணர்கள் குழு பரிந்துரைத்தது. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக தளர்வுகளை வழங்கியது. மூன்றாம் வகையில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது.
அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மேற்கண்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் குளிர் வசதி இல்லாமல் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் முறையாக பின்பற்றப்படுகிறது. சென்னையில் 1400 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.