புதுச்சேரி ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் இயங்காத தனியார் பேருந்துகள்: நகருக்குள் வேலைக்கு வருவோர் கடும் திண்டாட்டம்
ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் புதுச்சேரியில் இயங்காத தனியார் பேருந்துகளால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கிராமங்களில் இருந்து புதுச்சேரி நகரப்பகுதிக்கு பணிக்கு வருவோர் இதனால் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி கூடுதல்தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில், அனைத்து தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை மாலை 5 மணி வரை திறக்கவும் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்த தளர்வில் மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
இவைகளில் பணியாற்றுவோர் பெரும்பாலும் புதுச்சேரி நகரப் பகுதியைச் சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளில் இருந்து வேலைக்கு வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வின் முதல்நாளில் குறைவான எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
புதுச்சேரியைப் பொறுத்தவரை யில் சொற்ப அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்படு வதால், வேலைக்கு வருவோ ரில் பெரும்பாலானோர் தனியார்பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர். தனியார் பேருந்துகள் இதுவரையில் இயக்கப்படாததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கெனவே ஊதிய இழப்பை சந்தித்துள்ள தனியார் நிறுவனத்தினர் பெட்ரோல் விலை உயர்வு தருணத்தில் இருசக்கர வாகனங்களில் வந்து செல்வது தங்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் கூறுகையில், ” கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நாங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்ற நாள்தோறும் தனியார் பேருந்துகளில் வருவோம். இதுவரையிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்துத்துறை அதிகாரிகளோ இதை கண்டுக்கொள்வதில்லை.
வேலையைத் தக்க வைக்க, கிராமங்களில் இருந்து நகரப் பகுதிக்கு பலரும் தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களில் இருவராக வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் இருவராக வந்தால், ஊரடங்கு விதிகளை காரணம் காட்டி போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழலில், இதை எப்படிஎதிர்கொள்வது என்றே தெரியவில்லை’ என்று குறிப்பிடுகின்றனர்.
தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்த போது, ” மாலை 5 மணி வரை மட்டும்தான் ஊரடங்கில் தளர்வுகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்துகள் இயக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் தமிழக பகுதிக்குள் புதுவை பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளது. புதுவைப் பகுதியை மட்டுமே திட்டமிட்டு பேருந்துகளை இயக்கினால் லாபத்தை தராது. இதைத் தாண்டி பொதுமக்களிடம் பேருந்துகளில் செல்ல இன்னும் தயக்கம் உள்ளது. நகரப் பகுதிக்குள் வேலைக்கு வருவோருக்காக மட்டுமே நாங்கள் பேருந்துகளை இயக்கினால் அது எங்களுக்கு நஷ்டத்தையே தரும்’ என்கின்றனர்.
இந்த நெருக்கடியைத் தீர்க்க தற்காலிகமாக அரசு தரப்பில் இருந்து கிராமங்களில் இருந்து நகரப் பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.