செய்திகள்விளையாட்டு

Euro 2020 | ஸ்பெயினின் 918 பாஸ்கள் சாதனை வீண்; சுவராக நின்ற ஸ்வீடன் தடுப்பு வீரர்கள்- ஆட்டம் கோல் இல்லாமல் டிரா

53views

ஸ்பெயின் ரசிகர்களுக்குத்தான் ஏமாற்றம், ஏனெனில், 918 பாஸ்கள், 85% பந்துகள் ஸ்பெயின் வசம் இருந்தது போன்ற புதிய சாதனைகளை ஸ்பெயின் இந்தப் போட்டியில் படைத்தாலும் என்ன பயன், ஒரு கோலைக் கூட அடிக்க முடியவில்லை, காரணம், ஸ்வீடன் போட்டிக்கு முன்னரே முடிவு எடுத்து விட்டது ‘தடுப்பாட்டம் தவிர வேறொன்றறியேன் பராபரமே’ என்ற கொள்கையில் தீவிரமாக இருந்தது.

கடைசியில் ஸ்வீடனுக்கு இந்த ட்ரா வெற்றியின் திருப்தியையும் ஸ்பெயினுக்கு 2 புள்ளிகளை கோட்டை விட்டோமே என்ற வருத்தத்தையுமே அளித்திருக்கும். ஏனெனில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா ஒரு அருமையான வாய்ப்பை வைடாக அடித்து வீணடித்தார்.

இடைவேளைக்கு முன்னதாக ஸ்வீடனுக்கு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் அலெக்சாண்டர் ஐசக்கின் ஷாட்டை மார்க்கஸ் லோரண்ட்டி போஸ்ட்டிற்கு திருப்பி விட்டார்.

ஸ்பெயினுக்கு 3 வாய்ப்புகள் கிடைத்தன. டேனி ஆல்மோ தலையல் முட்டிய கோல் வாய்ப்பை ராபின் ஆல்சன் தடுத்தார். பிறகு கோகேவுக்கு கிடைத்த வாய்ப்பும் வீண், ஆனால் அல்வாரோ மொராட்டோவின் வாய்ப்பு வீணடிக்கப் பட்டது ஸ்பெயினுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஸ்வீடன் தன் பகுதியை விட்டு வரவில்லை, மிகவும் ஆழமான தடுப்பாட்டம் ஸ்பெயினுக்கு வெறுப்பை கிளப்பியிருக்கும்.

வெறும் பாஸ்கள் மட்டுமே ஆட்டம் என்றால் பினிஷிங் யார் செய்வது என்பது ஸ்பெயின் மேனேஜர் லூயிஸ் ஹென்றிக்கிற்கு நிச்சயம் கேள்வியாக இருந்திருக்கும். இந்தப்போக்கை மாற்ற அவர் முயற்சி செய்ய வேண்டும், கடுமையான தடுப்பாட்டத்தை முறியடிக்க ஆக்ரோஷமான, இன்னும் சொல்லப்போனால் ரெட் கார்டுகளுக்கு அஞ்சாத ஒரு ஆக்ரோஷம் தேவை. ஸ்பெயினுக்கு அப்படிப்பட்ட ஆட்டம் இப்போது தேவையாக இருக்கிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!