வரிசையாக எழுத்தாளர்களின் நாவல்களை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் வெற்றிமாறன். இவரின் அசுரன் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை தழுவியது. அது நடிகர் தனுஷுக்கு தேசிய விருதை தேடி தந்தது. அதுபோல் விசாரணை படமும் ‘லாக்கப்’ என்ற புத்தகத்தை தழுவிய கதைதான்.
அதையடுத்து தற்போது சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் விஜய் சேதுபதி கைதியாக நடிக்கவுள்ளார். இந்த படமும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையமாக வைத்த படம்தான்.
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை தழுவி உருவாகிறது. இப்படியாக எழுத்தாளர்களின் படைப்பை தனது படங்களுக்கு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதால் தான் மற்ற படங்களை விட வெற்றிமாறனின் படங்கள் கதையழுத்தம் உள்ள படங்களாக அமைகிறது.