செய்திகள்தமிழகம்

குளச்சலில் கட்டுமரம், வள்ளங்களில் அதிகளவில் பிடிபடும் நெத்திலி மீன்கள்: ஊரடங்கு நேரத்தில் மீனவர்களுக்கு கைகொடுக்கிறது

106views

குளச்சலில் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் அதிகளவில் நெத்திலி மீன்கள் பிடிபடுகின்றன. ஊரடங்கு நேரத்தில் இவை மீனவர்களின் வருவாய்க்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றன.

தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விசைப்படகுகளுக்கான தடைக்காலமும் அமலில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் தடைக்காலம் 14-ம் தேதிமுடியவுள்ளது. மேற்கு கடற்பகுதியில் ஜூலை 31-ம் தேதி வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரைமடி பகுதிகளில் மட்டும் வள்ளம், கட்டுமரங்களில் பிடிபடும் குறைந்த அளவு மீன்கள் கிராம, நகரப் பகுதிகளில் சமூக இடைவெளியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. எப்போதும் இல்லாத வகையில் ஒரு சாளை மீன் ரூ.10-க்கு விற்பனை ஆகிறது. தற்போதைய சூழலில் இவற்றை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, சுழற்சி முறையில் குமரி கடலோர கிராமங்களில் வாரத்தில் 3 நாட்கள் கட்டுமரம், வள்ளங்களில் கரைமடி பகுதிகளில் காலையில் இருந்து மதியம் வரை மீன்பிடிக்க, மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு குளச்சலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கடந்த 3 நாட்களாக நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவை துறைமுக ஏலக்கூடத்தில் மலைபோல் குவித்து வைத்து ஏலம் விடப்படுகின்றன. ஊரடங்கால் போதிய வர்த்தகம் மேற்கொள்ள முடியாத நிலையில், கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால், நெத்திலி மீன்கள் உள்ளூர் மீன் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 30 கிலோ வரையுள்ள நெத்திலி மீன் கூடை ஒன்று ரூ.800 முதல் ரூ.2,000 வரை ஏலம் போனது. அதிக மீன்கள் கிடைத்தாலும் போதிய விலை இல்லை என மீனவர்கள் தெரிவித்தனர். அதேநேரம், ஊரடங்கு நேரத்தில் நெத்திலி மீன்கள் ஓரளவு வருவாயை ஈட்டித்தருவதாக தெரிவித்தனர்.

பொதுமக்களும், வெகு நாட்களுக்கு பின்னர் குறைந்த விலைக்கு கிடைக்கும் நெத்திலி மீன்களை தாராளமாக வாங்கி பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!