செய்திகள்தமிழகம்

தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு; ஆறுகளில் கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

85views

மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டுமென தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலை ஏற்றிச்செல்ல, அதற்னெ வடிவமைக்கப்பட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரிகள் உள்ளன. அரசு மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள், என 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் லாரி உரிமையாளர்கள் லாரிகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. மணல் குவாரிகள் இயக்கப்படாததால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடங்கி உள்ளது.

கடந்த ஆட்சியில் குறைந்த எண்ணிக்கையிலான மணல் குவாரிகளை திறந்து, வரிசைப்படி இல்லாமல் முறைகேடாக மணல் வழங்கப்பட்டது. அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற பலர், செயற்கை மணல் (எம்.சேண்ட்) குவாரிகளை நடத்தி வருவதால், அவர்களுக்கு ஆதரவாக மணல் குவாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. குவாரிகள் மூலம் நாள்தோறும் 3000 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டதால், மணல் விலை யூனிட்டுக்கு ரூ.15 ஆயிரமாக உயர்ந்தது.

இதனால் தரமற்ற செயற்கை மணல் பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் உறுதித்தன்மையின்றி இடிந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து செயற்கை மணல் குவாரிகளையும் ஆய்வு செய்து, முறையாக பொதுப்பணித்துறையிடமிருந்து தரச்சான்றிதழ் பெறாமல் இயங்கும் குவாரிகளை தடைசெய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆங்காங்கே மணல் திட்டுகள் தேங்கியுள்ளன. அந்த இடங்களை கண்டறிந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அதிக எண்ணிக்கையிலான மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும். லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாவட்டங்கள் தோறும் கிராவல் மண் மற்றும் சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!