செய்திகள்தமிழகம்

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

82views

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே உள்ளது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் அனுமதி அளிப்பதால் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி கொரோனா சிகிச்சை முறைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில்,

‘கொரோனா நோய் தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அவர்கள் முதலில் அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். அவர்களின் உடல்நிலை முதற்கட்டமாக அங்குப் பரிசோதனைச் செய்யப்படும்.

இவ்வாறு பரிசோதிக்கும் போது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருப்பின் அவர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு வீட்டுத் தனிமையில் இருக்கும்போது ஆக்சிஜன் அளவு மாறுபட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். அங்குள்ள மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்னர் அளிக்கும் பரிந்துரையின்படி மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளவு 90, 94 உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது. நோயாளிகள் கொரோனா நோய்த் தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு 90 கீழ் சென்றால் மட்டுமே நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும்.

ஆனால் ஆக்சிஜன் அளவு சீராக இருந்தும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படும் ஒருவருக்கு அவசர தேவைக்குக்கூட மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைப்பதில்லை.

இந்த சூழலைத் தவிர்க்கும் விதமாகத் தமிழக அரசு இந்த புதிய கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது’

எனக் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!