டெல்லி சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி!: மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை..!!
டெல்லியில் உள்ள சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைந்த பாடில்லை. பல இடங்களில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இந்தோ திபெத்தின் எல்லை பாதுகாப்பு போலீஸ்படை சார்பில் சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மன அழுத்தத்தை தளர்த்துவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக இந்தோ திபெத்தின் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டதாகவும் யோகா பயிற்சி அவர்களின் மன அழுத்தத்தை தளர்த்த உதவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.