சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினம்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக முதுகலை நீட் தேர்வை மத்திய அரசு 4 மாதங்களுக்குச் சமீபத்தில் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 40,000 வழங்கப்படும்.